Ad Code

Responsive Advertisement

முதுகலை மருத்துவ மாணவர்களை கிராமப்புற பணிக்கு அனுப்ப திட்டம்

''முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களை, கிராமப் புற மருத்துவ பணிக்கு அனுப்புவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.



லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:முதுகலை மருத்துவ படிப்பு முடித்தவர்களை, கிராமப்புற பணிக்கு அனுப்புவது என, முந்தைய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அந்த திட்டம் அமலுக்கு வரவில்லை.முந்தைய அரசின் திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, தற்போதைய அரசு பரிசீலித்து வருகிறது. முதுகலை மருத்துவ படிப்பை முடித்தவர்களுக்குப் பதிலாக, முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களேயே, கிராமப்புற பணிக்கு அனுப்புவது தொடர்பாக, சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினருடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.மருத்துவ மாணவர்களை, கிராமப்புற பணிக்கு அனுப்புவது தொடர்பாக, 18 மாநிலங்களில் உள்ள, 184 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.இதுதொடர்பாக, விரைவில் முடிவு எடுக்கப்படும் என, நம்புகிறேன்.



முதுகலை மருத்துவ மாணவர்களை, கிராமப்புற பணிக்கு அனுப்புவதன் மூலம், ஆரம்ப சுகாதார நிலையங்களில், போதிய அளவில், டாக்டர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.மேலும், முதுகலை மருத்துவம் படிக்கும் போது, கிராமப்புற பணிக்கு செல்லும் மாணவர்களுக்கு, போட்டித் தேர்வுகளில், 30 சதவீத போனஸ் மதிப்பெண் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. மாநிலங்களில் மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில், மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. அதனால், பின்தங்கிய மாவட்டங்களில், சுகாதார மையங்களை அமைக்க உதவி வருகிறது. மேலும், புதிதாக பிறக்கும் குழந்தைகள் இறக்காமல் தடுக்க, கணிசமான அளவுக்கு உபகரணங்களும் வழங்கப்படும்.இவ்வாறு, ஹர்ஷ்வர்த்தன் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement