Ad Code

Responsive Advertisement

பள்ளியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: பெங்களூருவில் பள்ளி முன் பெற்றோர் போராட்டம்

பெங்களூருவில், ஒன்றாம் வகுப்பு படிக்கும், 6 வயது சிறுமியை, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் செக்யூரிட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இதை அறிந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட பள்ளி முன் கூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர்; பள்ளியின் கண்ணாடி கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்.


உடற்பயிற்சி ஆசிரியர்:

பெங்களூரு நகரில், சர்வதேச தரத்தில் கல்வி, நீச்சல்குளம், உடற்பயிற்சி, உள்விளையாட்டு அரங்கம் என அனைத்து வசதிகளும் கொண்ட, 'விப்கியார்' என்ற பெயரிலான தனியார் பள்ளிகள், பல இடங்களில் இயங்கி வருகின்றன. இப்பள்ளிக் கிளை, மாரத்தஹள்ளியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில், ஒடிசாவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரின், 6 வயது மகள், ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 2ம் தேதி, வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது, அந்தச் சிறுமி, கழிவறைக்கு சென்ற போது, பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர், பள்ளியின் செக்யூரிட்டி ஆகிய இருவரும் சேர்ந்து, அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து, அந்தச் சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. சில நாள் கழித்து, சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாத சிறுமி, விஷயத்தை தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின், அந்தச் சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். அதன் பிறகு போலீசாரும், பள்ளி நிர்வாகத்தினரும் சரிவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, நேற்று முன்தினம் ஏராளமான பெற்றோர், பள்ளி முன், போராட்டத்தில் குதித்தனர்; போராட்டம், நேற்றும் நீடித்தது. நேற்று காலையிலிருந்து மதியம், 1:00 மணி வரை, அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டால் வேதனையடைந்து, பள்ளியின் அனைத்து கேட்டுகளையும் மூடி, போராட்டத்தை தீவிரப்படுத்தினர். ஒரு கட்டத்தில், கோபமடைந்த பொதுமக்கள், பள்ளியின் வாசல் கண்ணாடி கதவை நொறுக்கினர். பள்ளியை சுற்றி, மனித சங்கிலி அமைத்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.



எச்சரிக்கையாக...:

போராட்டம் தீவிரமடைந்ததை கவனித்து, அங்கு வந்த கூடுதல் போலீஸ் கமிஷனர், பிரணவ் மொஹந்தி, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செக்யூரிட்டி, உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பள்ளி நிர்வாக தலைவர், ருஸ்தும் கேர்வாலா, பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார். இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் எச்சரிக்கையாக இருப்பதுடன், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தார். சில நாட்களுக்கு முன், காரில், தன் ஆண் நண்பருடன் இருந்த முதுகலை பட்டப்படிப்பு மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள், பள்ளிச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது, பெங்களூருவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement