Ad Code

Responsive Advertisement

தலித்துகள், பழங்குடியினருக்கான மாநில ஆணையம்: 3 மாதங்களுக்குள் அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தலித்துகள், பழங்குடியினருக்காக மாநில அளவிலான ஆணையத்தை மூன்று மாதங்களுக்குள் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக என்.ராஜாராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் மாநில அளவிலான ஆணையம் அமைப்பது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 5, 28-ஆம் தேதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

அதன்படி குறிப்பிட்ட காலத்துக்குள் மாநில அளவிலான ஆணையம் அமைப்பதற்கு அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் மாநில அளவிலான ஆணையம் அமைப்பது குறித்த முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்காக குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த உத்தரவின் நகல் கிடைக்கப் பெற்ற நாள் முதல் மூன்று மாதங்களுக்குள் மாநில அளவிலான தலித்துகள், பழங்குடியினருக்கான ஆணையத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement