Ad Code

Responsive Advertisement

ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம்


மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.


நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது. குழுவின் உறுப்பினர்கள் விவேக் ரே, ரதின் ராய், மீனா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், படிகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை நிர்ணயிப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க நீதிபதி அசோக் குமார் தலைமையிலான ஊதியக் குழுவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது. இக்குழுவின் பரிந்துரை 2016-17 நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் குழுவின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகும், இக்குழு எப்போது செயல்படத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இக் குழுவின் கூட்டத்தை வரும் 23ஆம் தேதி கூட்ட அசோக் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். முதலாவது கூட்டம் என்பதால் அது சம்பிரதாய அளவில் இருக்கும் என்றும் குழுவின் செயல் திட்டம், பணிகள் தொடர்பாக அதில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

மத்திய அரசு ஊழியர்கள், அகில இந்திய அரசுப் பணி, யூனியன் பிரதேசங்களில் பணியாற்றுவோர், இந்திய கணக்குத் தணிக்கைத் துறை, பாரத ரிசர்வ் வங்கி நீங்கலாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தொடர்பான ஊதியம், படிகள் போன்றவை குறித்து ஏழாவது ஊதியக் குழு ஆய்வு செய்யவுள்ளது.

தற்போது அமலில் உள்ள சம்பள படிகள், சலுகைகள், பாதுகாப்புத் துறையில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய காலப் பலன்கள், அரசுப் பணியில் திறமையை ஊக்குவித்தும் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில், புதிய ஊதிய விகிதத்தை மாற்றியமைப்பது, சமூக-பொருளாதார-தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பது, அவர்களின் ஊதியத்துக்கு ஏற்ப சலுகைத் திட்டங்களை அறிவிப்பது, 1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய காலத் திட்டத்தின்படி எவ்வளவு ஓய்வூதியத்தை வழங்கலாம் என்பன உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அளிக்கும் பணி ஏழாவது ஊதியக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனது ஆய்வின் தேவைக்காக பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்கள், தொழிற்துறை, அரசுத் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற வல்லுநர்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை நியமித்துக் கொள்ள இக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்குழு 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தனது பணியை 23-ஆம் தேதி தொடங்கும் ஊதியக் குழு பொதுமக்கள், தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரில் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுமக்களின் கருத்துகளை அறியும் வகையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்த்ன. கருத்துகளை வரவேற்க மே 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊதியக் குழுவிடம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி: செயலர், ஏழாவது ஊதியக் குழு, அஞ்சல் குறீயிட்டு எண் 4599, ஹோஸ் காஸ் அஞ்சலகம், புது தில்லி-110 016.
Secretary, Seventh Central Pay Commission,
Post Box No. 4599, Hauz Khas P.O,
New Delhi 110 016
E-mail:- secy-7cpc@nic.in

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement