Ad Code

Responsive Advertisement

1008 தமிழாசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை


சென்னையில் நடைபெற்று வரும் ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆச்சார்ய வந்தனம் நிகழ்ச்சியில் 1,008 தமிழாசிரியர்களுக்கு மாணவ, மாணவிகள் பாத பூஜை செய்தனர்.

ஹிந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளை நடத்தும் 6-ஆவது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக மைதானத்தில் ஜூலை 9-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியின் 5-ஆவது நாளான சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆச்சார்ய வந்தனம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள 50-க்கும் அதிகமான பள்ளிகளைச் சேர்ந்த 1,008 தமிழாசிரியர்களும், 1,008 மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.

ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டிருந்த 1,008 ஆசிரியர்களுக்கும் ஒரே நேரத்தில் மாணவ, மாணவிகள் பாத பூஜை செய்து வழிபட்டனர். ஆசிரியர்களுக்கு வேஷ்டி, சேலைகளை வழங்கி ஆசி பெற்றனர்.

இந்த ஆச்சார்ய வந்தனம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் செய்திருந்தது.

ஆசிரியர்களை தெய்வமாகப் போற்றும் நமது மரபை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கண்காட்சி அமைப்பாளர்களில் ஒருவரான நம்பி நாராயணன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

6-ஆவது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியின் விழாக்குழு தலைவரும், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான விஸ்வநாதன், பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கண்காட்சி குறித்து கருத்து தெரிவித்த விஸ்வநாதன், ஹிந்து மத அமைப்புகள் செய்து வரும் சேவையை மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. இது சேவை செய்பவர்களை மேலும் உற்சாகப்படுத்தும். மேலும் பலரை சேவையாற்ற தூண்டுகோலாக அமையும். ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் நடத்தப்பட்ட ஆச்சார்ய வந்தனம் போன்ற நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கது என்றார்.

கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 250 அரங்குகளிலும் சனிக்கிழமை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஹிந்து மதம் தொடர்பான புத்தகங்கள், படங்கள், குறுந்தகடுகளை வாங்கிச் சென்றனர்.

கண்காட்சிக்கு இன்று மேனகா காந்தி வருகை
சென்னை திருவான்மியூரில் நடைபெறும் 6-ஆவது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) பார்வையிடுகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பரம்வீர் சக்ரா விருதுபெற்ற ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும், பாரத மாதா வந்தனமும் நடைபெறவுள்ளது. பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு மையம் என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அறநிலையத் துறைச் செயலாளர் கண்ணன், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி உள்ளிட்டோர் கண்காட்சியை சனிக்கிழமை பார்வையிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement