Ad Code

Responsive Advertisement

10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உடனடியாக 10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 10 வருடங்களுக்கு முன்பு வரை 450 மதிப்பெண் பெறுவது சாதனையாக இருந்தது.
ஆனால் தற்போதோ 490 மதிப்பெண் பெறுவது கூட பெரிய சாதனையாக மதிக்கப்படுவது இல்லை. சமீப காலங்களில் பல மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதற்கே சிரமப்பட்ட மாணவர்கள் அல்ல. 480 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்ற மாணவர்கள் என்பது தான் இதில் ஆச்சரியம்.

பிறகு ஏன் தற்கொலை முயற்சி? மாநில அளவில் முதல் இடம் பிடிக்க வில்லை எனும் வருத்தமும், பிரபல பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் நடத்தப்படும் கல்வி முறைக்கு பொருந்திப் போவதில் உள்ள சிக்கலும் தான் இவர்களை தற்கொலை முயற்சியில் ஈடுபட வைத்துள்ளது.மாணவர்களின் இந்த மனப்போக்கை மாற்ற நாம் முன் வைக்கும் சில யோசனைகள் -

1.உடனடியாக 10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2.மனப்பாடம் செய்து தேர்வில் கக்கும் முறையை ஒழித்து மாணவர்களின் புரிதல் திறனை சோதிக்கும் வகையில் வினாத்தாள் மதிப்பீடு இருக்க வேண்டும்.

3.பள்ளிகளில் முன்னதாகவே நடைமுறையில் இருக்கும் ”புத்தக பூங்கொத்து” திட்டத்தினை வலுவூட்டி அவற்றில் இருந்து கேள்விகள் பொதுத் தேர்வில் கேட்கப்பட வேண்டும். உதாரணமாக6 ஆம் வகுப்பு மாணவர்களின் தமிழ் புத்தகத்திலேயே ”Reference Books” என்ற தலைப்பில் பல புத்தகங்களின் பெயரை அச்சடித்து தர வேண்டும். குறிப்பிட்ட அத்தகைய புத்தகங்களை புத்தக பூங்கொத்து திட்டத்திற்காக மாணவர்கள் பார்வையிட ஏதுவாக உடனுக்குடன் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இதே போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உட்பட அனைத்து பாடங்களிலும் முப்பருவத்திலும் பயில வேண்டிய நூலக புத்தங்களின் பட்டியலை வழங்கி மாணவர்கள் குறிப்பிட்ட புத்தகங்களை பள்ளி நூலகத்திலிருந்து தேடிப்படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். 

இம் முறை முன்னதாகவே நடைமுறையில் இருந்தாலும் பெரிதாக வெற்றி பெற ஒவ்வொரு தேர்விலும் 25 மதிப்பெண்கள் இத்தகைய Referece நூல்களில் இருந்து கேட்கப்பட்டால் மட்டுமே மாணவர்களிடம் நூலக வாசிப்பு மற்றும் புரிந்து படித்தல், நல்லகருத்துகளை தேடிப்படித்தல் ஆகிய குணங்கள் வளரும். படிப்படியாக இம்முறை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். (முன்னதாகவே இம்முறை சி.பி.எஸ.இ திட்டத்தில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது)எங்கள் மாணவர்கள் அதிக படியான மன நெருக்குதலுக்கு உட்பட்டு புத்தி பேதலிக்கும் நிலைக்கு முந்தைய நிலையில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் வருடம் தோறும் விட்டில் பூச்சிகளாய் இறந்து வருகின்றனர். மவுலிவாக்கம் கட்டிட விபத்து போன்று 60 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானாலோ அல்லது 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்ற அசாதாரண எண்ணிக்கைக்கு மட்டும் அரசு உடனடியாக தீர்வு காணாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வரும் எம் மாணவர்களின் தற்கொலை முயற்சியையும், உயிர் பலியையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இன்றைய கல்வி முறை மற்றும் மதிப்பீடு முறையில் உடனடியாக மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள நமது கருத்துக்கள் குறித்து கல்வியாளர்களுடன் விவாதித்து நல்லமுறையில், விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கட்டுரை ஆக்கம் 
-திரு. K. மோகன், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைபள்ளி, அச்சமங்கலம், வேலூர் மாவட்டம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement