Ad Code

Responsive Advertisement

அச்சம் விட்டு, சிகரம் எட்டு!

ஆட்டிஸம் பாதிப்புள்ள குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு  மலையேற்ற சாகசப் பயிற்சி அளித்து வருகிறார் ஒரு தமிழர்


நீலகிரி மாவட்டம் குன்னூரில் நெடுநெடு மலை... கிடுகிடு பள்ளத்தாக்கு... இதற்கு நடுவில் பயணம் செய்து அந்தத் தேயிலைத் தோட்டத்தை அடைந்தபோது, அதன் நடுவில் அமைந்திருந்தது தேசிய சாகசப் பயிற்சி மற்றும் மேலாண்மைப் பள்ளி (National Adventure and Leadership School - NALS).  தென்னிந்தியாவில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற முதல் சாகசப் பயிற்சிப் பள்ளி இது. இங்கு சேர்ந்து ஏராளமானவர்கள் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்கிறார்கள். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதுதான். இந்தப் பயிற்சிப் பள்ளியின் நிறுவனர் கோவையைச் சேர்ந்த சேஷாத்ரி வெங்கடேசனும் சிறந்த மலையேற்ற வீரர்தான். இமயமலை, லடாக், குலுமனாலி போன்ற மிகப்பெரிய பனிமலைகளில் எல்லாம் ஏறி சாதனை படைத்தவர்.

‘மலை ஏறும் ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?’ என்று கேட்டபோது, அவர் சொன்ன ஃப்ளாஷ்பேக் ரொம்பவே சுவாரஸ்யமானது. நான் காலேஜ் படிக்கும்போது இமயமலைக்கு சுற்றிப் பார்க்க கூட்டிட்டுப் போனாங்க. என் கூட வந்தவங்க பலரும் ‘தலை சுத்துத்து. . . மயக்கம் வருது’ன்னு சோர்ந்து போயி நின்னப்போ, நான் மட்டும் உற்சாகமா மலையில ஏறினேன். ரொம்ப பியூட்டிஃபுல்லா சந்தோஷமா இருந்துச்சு. ரொம்பப் புத்துணர்வா ஃபீல் பண்ணினேன்.

படிப்பு முடிஞ்சு இந்திய கப்பற்படையில் 7 வருடங்கள் பணியாற்றினேன். பிறகு, வெளிநாடுகளிலுள்ள தனியார் கப்பல் நிறுவனங்களில் வேலை. அந்த நாட்களில் விடுமுறைகளில் வீட்டுக்கு வருவேன். அப்படி வரும்போதெல்லாம் மலை ஏறி சந்தோஷமா பொழுதைக் கழிப்பேன். என் மனைவியும் என்னுடன் மலையேற ஆசைப்பட்டதால அவளும் நானும் ஒருநாள் மலையேறப் போனோம். அப்போதான் உற்சாகத்தில் இமயமலையில் 18 ஆயிரம் அடி பயணம் செய்தோம். எனக்கே  ஆச்சரியமா இருந்தது. அப்புறம்தான் மனசுக்குள்ள மலை ஏறுவதை புரஃபஷனலா கத்துக்கணும்ங்கிற ஆசை தோன்றியது. அதுக்கு இரண்டு வருடம் பயிற்சி எடுக்கணும். நான் வேலை பார்த்துட்டு இருந்த சிங்கப்பூர் கம்பெனியில 2 வருஷ லீவு வாங்கிட்டு இந்தியா வந்து மலையேற்றப் பயிற்சியை முடிச்சேன். திரும்பவும் வெளிநாடு போக மனம் விரும்பல. முழு நேரமாவே இதில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன். மலையேற ஆர்வமுள்ளவர்களுக்கு மலையேற்றப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஏற்பட்டது.  என்னைப்போலவே மலையேறுவதில் ஆர்வமுள்ள நண்பர்களான ராஜேந்திரன், ரவீந்திரநாத், சுதாஸ்ரீராம் ஆகியோரோடு கடந்த 2008-ஆம் ஆண்டு ஆரம்பிச்சதுதான், இந்த தேசிய சாகசப் பயிற்சி மற்றும் மேலாண்மைப் பள்ளி. இன்னைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ. டி. இளைஞர்கள், தனியார் ஊழியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் என்னிடம் வந்து மலையேறும் பயிற்சி எடுத்துக்கிறாங்க. அதுமட்டுமில்லாம, 4 மாநிலத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் ஒவ்வொரு வருஷமும் வந்து எங்ககிட்ட ட்ரெக்கிங்,  பாறையேற்றம், மலையிலிருந்து கயிற்றில் தொங்குவது போன்றவற்றைக் கத்துக்கிறாங்க" என்றவரிடம், ‘மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தது எப்படி? அதில் ரிஸ்க் அதிகம் உண்டே?’ என்று கேட்டோம்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஸ்ரீராம்-அகிலா தம்பதி என்னைப் பார்க்க வந்தாங்க. தங்கள் குழந்தைக்கு மலையேறும் பயிற்சி கொடுக்கணும்னாங்க. நான் ரொம்ப ஷாக் ஆனேன். ஏன்னா, அந்த சிறுவன் ஆட்டிஸம் பாதிப்புள்ளவன். அதற்காக நான் தயங்கவில்லை. வாழ்க்கையையே சேலஞ்சா எடுத்துக்கிட்டு வாழும் அந்தச் சிறுவனுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கிறதை என்னோட சேலஞ்சா எடுத்துக்கிட்டேன். அவன் பேரு நிஷாந்த். இன்னைக்கு, ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட பலரும் என்கிட்ட மலையேறும் பயிற்சி எடுத்துக்கிட்டு சாதனை படைக்கிறதுக்கு அவன்தான் காரணம். முதல்நாள் அவனுக்கு சில அடி தூரங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அவனுக்கு ஏற்பட்ட உற்சாகத்தைப் பார்த்துட்டு தொடர்ந்து பயிற்சி கொடுத்ததோட விளைவு, 5,600 அடி வரைக்கும் மலையேறி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினான். அதுக்கப்புறம்தான், ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயிற்சி கொடுப்பதில் என் கவனத்தைத் திருப்ப ஆரம்பிச்சேன். அதுமட்டுமில்ல, போலியோ பாதிப்புள்ள, சரியாக நடக்கவே முடியாத சிறுமியை மலையேறும் பயிற்சிக்காக பெங்களூருவிலிருந்து கூட்டிட்டு வந்தாங்க சிறுமியோட அம்மா . அந்தச் சிறுமிக்கு பயிற்சியும் ஊக்கமும் அளித்து மலையேற வைத்தேன். அதைப் பார்த்த சிறுமியோட அம்மா அழுதுட்டாங்க. அது சாதாரண அழுகை அல்ல. தன்னோட மகள்கிட்ட இருந்த திறமையைப் பார்த்த சந்தோஷத்தால ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர். என்னோட பயிற்சிக்கு இதைவிட பெரிய ஊக்கம் வேறென்ன கிடைச்சிடப் போகுது?

இதுவரை குன்னூரில் 30-க்கு மேற்பட்ட ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட சிறுவர் -சிறுமிகள் பயிற்சி எடுத்திருக்காங்க. இதன் அடுத்த இலக்காக, முதல் முறையா மே 27-ஆம் தேதி ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட 8 சிறுவர்களை இமயமலைக்குக் கூட்டிச் சென்று மலையேற்றப் பயிற்சி கொடுத்து திரும்பியுள்ளேன்" என்று உற்சாகமாக நம்மிடம் பேசி முடித்தார் சேஷாத்ரி வெங்கடேசன்.

‘ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட நிலையில் மலை ஏறும் பயிற்சி எடுத்தது எப்படி?’ நிஷாந்தின் அப்பா ஸ்ரீராம் கூறினார்.

என் பையனுக்கு 18 வயசாகுது. ஆனா, இன்னமும் அவன் குழந்தையாத்தான் இருக்கான். சாப்பிடத் தெரியாது. பசிச்சா சாப்பாடு வேணும்னாக் கூட கேட்கத் தெரியாது. அப்படிப்பட்டவன் இன்னைக்கு குன்னூரில் 5,600 அடி உயரத்துக்கு மேல்வரை மலை ஏறிப்போனதை நினைக்கும்போதே பூரிப்பா இருக்கு. அதுவும், ரொம்ப ஆர்வமா செய்யுறான். ஆரம்பத்துல, மலையேறப் பயந்தான். ஏற மாட்டேன்னு அடம் புடிச்சு அழுதான். ஆனா, மலையேற்றம் கயிறேற்றம் போயிட்டு வந்தப் பிறகு, ‘திரும்பவும் கூப்பிட்டுக்கிட்டுப் போங்க’ன்னு அடம் பிடிக்கிறான். கடந்த 5 வருஷமா சேஷாத்ரி சார்கிட்ட சாகசப் பயிற்சிக்காக நிஷாந்த்தை அழைச்சிட்டுப் போறோம். நிஷாந்தை மலையேற்றப் பயிற்சி எடுக்க வெச்சதிலிருந்து ரொம்ப துறுதுறுன்னு ஆக்டிவா மாறிட்டான்.

ஆட்டிஸக் குழந்தைகளிடம் தனிப்பட்ட திறமைகள் இருக்கு. அதைப் பெற்றோர்கள்தான் வெளிக்கொண்டு வர வேண்டும். என் பையனை ஆட்டிஸக் குழந்தைன்னு சொல்லிக்கிட்டிருந்தவங்கள்லாம் இன்னைக்கு சாகசக் குழந்தைன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இந்தப் பூரிப்பெல்லாம் என் பையனை வெளியே கொண்டுவந்து சாகசப் பயிற்சியில ஈடுபட வெச்சதாலதான் கிடைச்சது. இதைவிட வேற என்னங்க சந்தோஷம்?" என்கிறார் மன நெகிழ்ச்சியுடன்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளைஞர் கோபாலகிருஷ்ணன் தன்னுடைய மலையேற்ற சாகச அனுபவத்தைப் பற்றிக் கூறினார்...

கண்ணு தெரியாத எனக்கும் மலையேற்றப் பயிற்சி கொடுப்பீங்களா?’ன்னு சேஷாத்ரி சார்கிட்ட கேஷுவலாத்தான் கேட்டேன். ‘ஓ தாராளமா முடியுமே. மலையேறனும்ங்குற ஆர்வம் எப்போ உங்க மனசுக்குள்ள வந்துடுச்சோ, அப்பவே இந்த கோர்ஸின் முதல் அத்தியாயத்துல பாஸ் பண்ணிட்டீங்க.  அதனால, கத்துக்கொடுக்கிறதும் எனக்கு ரொம்பவே சுலபம்’னு சேஷாத்ரி சார் சொல்லும்போதே என் உடம்பெல்லாம் முறுக்கேற ஆரம்பிச்சுடுச்சு. முதலில் ஒரு வாரத்துக்கு அருகிலுள்ள மலைகளில் பயிற்சி கொடுத்தாரு. பிறகு, ‘இமயமலையில் ஏறப் போறோம். 7 நாள் கேம்ப். அதுக்கு உங்களையும் செலக்ட் பண்ணியிருக்கேன்’னு அவர் சொல்ல, கனவா அது நினைவான்னு என்னையவே கிள்ளிப் பார்த்துக் கிட்டேன். நார்மலா இருக்கறவங்க கூடவே இமயமலைக்கு என்னையும் கூட்டுக்கிட்டுப் போனாரு. அதுக்கப்புறம் நடந்தது ஆச்சரியம். பார்வை இல்லைன்னாலும் அவர் கையைப் புடிச்சிக்கிட்டே 12 ஆயிரத்து 500 அடி ஏறிட்டேன். ஒண்ணு மட்டும் நிச்சயம்ங்க... மலை ஏறுவதில் கரணம் தப்பினால் மரணம். நாம போகும்போது ஆறு, பனிப்பாறை, பெரிய பெரிய மரங்கள் குறுக்கிடும். அதையெல்லாம் நாம கடந்து போகணும். அதனால, சேஷாத்ரி சார் சொல்ற ஒவ்வொரு வார்த்தையையும் ரொம்ப உன்னிப்பா கவனிச்சுக் கிட்டேன். என்னோட கையை அழுத்திப் பிடிச்சார்ன்னா ஸ்லோவா போகணும். லூஸ் பண்ணினார்ன்னா வேகமா போய்க்கிட்டே இருக்கலாம். எந்தத் தடையும் இல்லைன்னு அர்த்தம். இதுதான் எனக்கு சமிக்ஞை. எனக்குப் பயிற்சி கொடுக்க ஒரு ரூபாய் கூட அவர் வாங்கல. உண்மையைச் சொல்லணும்னா, மத்தவங்களுக்கு பயிற்சி கொடுத்ததைவிட பார்வையற்ற எனக்குப் பயிற்சி கொடுக்கும்போதுதான் அவர் ரொம்பவே சிரமப்பட்டார். இப்போல்லாம் எதை நினைச்சும் நான் கவலைப்படுறதில்ல. மலையேறியதால் மன உறுதியும் மன தில்லும் வந்துடுச்சு. இந்த உயரத்துக்குக் கொண்டுபோன சேஷாத்ரி சாருக்கு வெறும் நன்றி என்ற வார்த்தைகள் போதாது" என்று கண் கலங்குகிறார் 26 வயதே ஆன இளைஞர் கோபால கிருஷ்ணன்.

மலையேற்றப் பயிற்சியாளராக விரும்புகிறவர்களுக்கு 6 மாத கோர்ஸ் நடத்துறோம். 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண், பெண் யாராக இருந்தாலும் பயிற்சி எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாளராக உருவெடுக்கலாம். எங்களிடம் மட்டுமே தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய இடங்களில்  14 பயிற்சியாளர்கள் இருக்காங்க. 8 பேருக்கு ஒரு பயிற்சியாளர் பயிற்சி கொடுப்பார். கடந்த 6 வருஷமா 10 ஆயிரத்து 300 பேரை இந்த சாகசப் பயிற்சிக்காக அழைத்துப் போயிருக்கிறோம்" என்று கூறும் சேஷாத்ரி வெங்கடேசனுக்கு 2 மகள்கள். அதில் மூத்த மகள் ஸ்ரீநிதி இவருடைய பயிற்சி மையத்திலேயே சாகசப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். இரண்டாவது மகள் ஸ்ருதியும் பயிற்சியாளராகத் தயாராகி வருகிறார்.

சாகசப் பயிற்சி மையத்தின் தொடர்பு எண்கள் - 94422 75501, 0422 2542800, 2543800

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement