Ad Code

Responsive Advertisement

பிளஸ்-2 சாதனை மாணவர்களுக்கு ‘தி இந்து’ சிறப்பு விருது, பரிசு

  • பிளஸ்-2 தேர்வில் மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்த மாணவி ஏஎல்.அலமேலுவுக்கு "தி இந்து" சிறப்பு விருதை வேல் டெக் தலைவர் ஆர்.மகாலட்சுமி வழங்கினார். உடன் (இடமிருந்து) டாக்டர் காமாட்சி மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவன ஆலோசகர் டாக்டர் கே.எம்.ராதாகிருஷ்ணன், எக்ஸ்டெல் அகாடமி தலைமைச் செயல் அதிகாரி சாம் ஜார்ஜ், மாநில அளவில் 3-ம் இடம் பிடித்து விருது பெற்ற மாணவி எஸ்.நித்யா, மாணவர் டி.துளசிராஜன். படம்.ம. பிரபு
பிளஸ் 2 தேர்வில் 1,200-க்கு 1,193 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி எஸ்.சுஷாந்தி மாநிலத்தில் முதலிடமும், தருமபுரி வித்யா மந்திர் பெண்கள் பள்ளி மாணவி ஏஎல்.அலமேலு, 1,192 மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தையும், நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் டி.துளசிராஜன், சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.நித்யா ஆகியோர் 1,191 மதிப்பெண் எடுத்து 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

‘தி இந்து வெற்றிக்கொடி’ விருதுகள்
பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த இந்த 4 மாணவ, மாணவிகளுக்கும் ‘தி இந்து வெற்றிக்கொடி’ சிறப்பு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது. எக்ஸ்டெல் அகாடமி, டாக்டர் காமாட்சி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி சுஷாந்திக்கான விருது மற்றும் பரிசுத்தொகை ரூ.25 ஆயிரத்தை அவரது உறவினர் சாந்திகுமாரிடம் வேல்டெக் இன்ஜினீயரிங் கல்வி நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆர்.மகாலட்சுமி வழங்கினார். 2-ம் இடம் பெற்ற மாணவி அலமேலுவுக்கு விருது, பரிசுத்தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்கினார். 3-ம் இடம் பிடித்த மாணவர் துளசிராஜன், மாணவி நித்யா ஆகியோருக்கு விருது மற்றும் பரிசுத்தொகை தலா ரூ.10 ஆயிரத்தை எக்ஸ்டெல் அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஜார்ஜ் வழங்கிப் பாராட்டினார்.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சென்னை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் காமாட்சி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஆலோசகர் டாக்டர் கே.எம்.ராதாகிருஷ்ணன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மாணவர்களுக்கு ஆலோசனை
விருது பெற்ற மாணவ, மாணவிகளை வேல்டெக் தலைவர் மகாலட்சுமி வாழ்த்திப் பேசும்போது, ‘‘மாணவர்கள் மதிப்பெண் பெறுவதுடன் நின்று விடாமல் வேலை வாய்ப்புக்கு தகுந்தவர்களாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.
கல்வி ஆலோசகர் சாம் ஜார்ஜ் பேசுகையில், ‘‘மருத்துவமோ, பொறியியலோ மாணவர்கள் தங்கள் விருப்பப்படிதான் தேர்வுசெய்ய வேண்டுமே தவிர, பெற்றோர் நிர்பந்தத்தின்பேரில் தேர்வுசெய்யக்கூடாது’’ என்றார். டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்த்திப் பேசும்போது, ‘‘தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களால் எதையும் சிறப்பாக செய்ய முடியும். எந்த துறையை தேர்வு செய்தாலும் அதில் பக்தி, ஈடுபாடு, அக்கறையுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.
விருதுபெற்ற அலமேலு, துளசிராஜன், நித்யா ஆகியோர் கூறுகையில், ‘‘தி இந்து விருது பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருது எங்களுக்கு ஊக்கம், உற்சாகத்தை தருகிறது. தற்போது படித்துவரும் மாணவ, மாணவிகளுக்கும் இதுபோன்ற விருதுகள் பெரிதும் ஊக்கமளிக்கும்’’ என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement