Ad Code

Responsive Advertisement

சொத்தின் மதிப்பைக் கணக்கிடுவது எப்படி?

தனிநபர் ஒருவரின் மொத்த சொத்து மதிப்பு என்பது நிலம், வீடு, சேமிப்பு, நகைகள், வாகனங்கள் ஆகியவற்றின் தற்போதைய மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகும். தேர்தலில் போட்டியிடுபவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தனது சொத்து மதிப்பை தெரிந்து வைத்துக் கொள்ளலாம். சொத்து மதிப்பைக் கணக்கிட அசையா சொத்துகள், அசையும் சொத்துகள், வங்கி இருப்பு உள்ளிட்ட என்னென்ன விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
வீட்டின் மதிப்பு: சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் வீடு கட்டி எத்தனை வருடங்கள் ஆகின்றன என்பதை வைத்து மதிப்பைக் கணக்கிடலாம். வீடு கட்டப்பட்டு 20 அல்லது 30 வருடங்களைக் கடக்கும்போது, வருடந்தோறும் தேய்மானத்திற்கேற்ப வீட்டின் மதிப்பு அன்றைய மதிப்பில் குறிப்பிட்ட  சதவிகிதம் குறைய ஆரம்பிக்கும். அதுவரைக்கும் அருகிலிருக்கும் நிலத்தின் மதிப்பு உயர உயர வீட்டின் மதிப்பும் உயரும். கட்டுமானப் பொருட்களின் விலைகளை வைத்தும் மதிப்பு உயரும். எனவே வீட்டின் மதிப்பை அதன் சந்தை விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம்.

வாகனத்தின் மதிப்பு: வாகனத்தின் மதிப்பைப் பொறுத்தவரை வாங்கி மறுநாள் விற்றாலும் மதிப்புக் குறையவே செய்யும். இருசக்கர வாகனம் முதல் மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் அனைத்திற்கும் ஒவ்வொரு வருடமும் மதிப்பு குறையும். வாகனத்திற்கு இன்ஸ்யூரன்ஸ் கட்டும்போது அதில் வாகனத்தின் மதிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும். அதை வைத்துத் தெரிந்துகொள்ளலாம்.

வங்கி இருப்பு: இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு இருக்கிறது. சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு (Current Account) இவற்றில் இருக்கும் இருப்புத் தொகை, முதலீடுகள், சேமிப்புப் பத்திரங்கள் ஆகியவற்றைக் கூட்டி வங்கி இருப்பை மதிப்பிட்டுக் கொள்ளலாம். காப்பீடு: காப்பீடு வகைகளைப் பொறுத்து இதனையும் மதிப்பீடு செய்யலாம். முதலீடு மற்றும் சேமிப்பை உள்ளடக்கிய காப்பீட்டை வைத்துக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

சேமிப்புப் பத்திரங்கள்: தபால் அலுவலகத்தில் வாங்கி வைத்திருக்கும் சேமிப்புப் பத்திரங்கள் குறிப்பிட்ட வருடங்களில் இரட்டிப்பாகும். சேமிப்புப் பத்திரம் வாங்கியதையும் கணக்கிடலாம். இவை தவிர பரஸ்பர நிதி (–Mutual Fund) பங்குச் சந்தையில் முதலீடு செய்திருத்தல்.

நகைகள்: நகைகளைப் பொறுத்தவரை தங்கம், வெள்ளி இரண்டின் விலையுமே நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், கையிருப்பில் இருக்கும் நகைகளுக்கு இன்றைய விலை மதிப்பை வைத்தே  கணக்கிடலாம். நகையை மாற்றவோ, உருக்கவோ செய்யும்போதுதான் சேதாரத்தைக் கணக்கிட வேண்டிவரும்.

மரங்கள்: விவசாய நிலத்தில் இருக்கும் மரங்களின் மதிப்பையும் கணக்கிட வேண்டும். அவை பலன் தரும் மரங்களின் வகைகள் எனில் கொடுக்கும் பலனைப் பொறுத்தும், மரத்தின் வகைகளைப் பொறுத்தும் மதிப்பிடப்படும். இந்த மரங்களின் மதிப்பை பதிவாளர் அலுவலகத்திலிருந்து ஆய்வு செய்பவர்கள் சரியாகச் சொல்வார்கள்.  வீடுகளைச் சுற்றியும் சிலர் பத்துக்கும் மேற்பட்ட மரங்களை வைத்திருக்கலாம். தேக்கு, தென்னை, புளிய மரம், மாமரம், கருவேல மரம் இப்படி எந்த மரமாயினும் அதனையும் மதிப்பிடலாம்.

இப்படி நகை, பணம், வாகனம் போன்ற அசையும் சொத்துகள், நிலம், வீடு போன்ற அசையா சொத்துகளையும் மதிப்பிட்டு மொத்த சொத்து மதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

நிலத்தின் மதிப்பைக் கணக்கிடுவது எப்படி?
குறிப்பிட்ட நிலத்தின் சந்தை மதிப்பு மற்றும் வழிகாட்டி மதிப்பில் (Guideline Value) எது அதிகமாக வருகிறதோ அந்தத் தொகைக்கு உரிய முத்திரைக் கட்டணம் கட்ட வேண்டும் என்பது விதி. பொதுவாக சந்தை மதிப்பு ஒரே நிலையில் இருக்காது.

வழிகாட்டி மதிப்பு என்பது என்ன?
அரசு ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட பின்பற்றத்தக்க விலை மதிப்பை நிர்ணயித்திருக்கிறது. இதற்கு வழிகாட்டி மதிப்பு எனப் பெயர். சொத்து மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் கூடாது என்பதற்காக 1969-ஆம் வருடத்தில் இருந்து வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. வழிகாட்டி மதிப்பும் அந்தப் பகுதி வளர்ச்சியின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் உயர்ந்து வருகிறது.

ஒரு குறிப்பிட்ட சொத்தின் அரசு மதிப்பு அறிய, சொத்து எந்தப் பதிவு அலுவலகத்தின் கீழ் வருகிறதோ, அங்கே சென்று சர்வே எண்ணைக் கூறி அதன் மதிப்பை அறியலாம். இது காலி நிலத்திற்கான மதிப்பு. அந்த நிலத்தில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருந்தால் அதற்கான மதிப்பை வருடா வருடம் பொதுப்பணித்துறை வெளியிடும் சுற்றறிக்கையின் மூலம் அறியலாம்.

சந்தை மதிப்பு என்பது என்ன?
ஒரு சொத்தை வாங்கும்போது விற்பவர் ஒரு விலையையும், அச்சொத்தை வாங்க விரும்புபவர் ஒரு விலையையும் நிர்ணயிப்பர். இருவரும் தங்களுக்குள் சொத்தின் விலையைப் பற்றி ஒருமனதான முடிவிற்கு வந்தவுடன் விற்பனைக்கான ஒப்பந்தம் செய்வர். இந்த மதிப்பிற்கு சந்தை மதிப்பு என்று பெயர்.

அதன்பிறகு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது கிரயப் பத்திரத்தில் என்ன விலைக்கு வாங்குவதாகக் குறிப்பிடப்படுள்ளதோ அந்த விலைக்கு உரிய முத்திரைக் கட்டணம் கட்ட வேண்டும்.

இந்த முத்திரைக் கட்டணத்தைக் குறைவாகக் கட்டுவதற்காக உண்மையில் வாங்கும் விலையை விட குறைவான விலையை சிலர் குறிப்பிடுவது உண்டு. இதைச் சரி செய்யும் பொருட்டே அரசு, ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட விலையை நிர்ணயித்துள்ளது.

வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாகப் பெற்ற பணத்தைத் திரும்பப் பெற, முத்திரைக் கட்டணத்தைத் திரும்பப் பெற, பதிந்த பத்திரம் தர காலதாமதமாகுதல், தவறான பதிவைத் திருத்தம் செய்ய போன்ற பத்திரப் பதிவு பிரச்சினைகளுக்கு இந்தியன் குரல் இலவச உதவி மையத்தை அணுகலாம் -  94443 05581 / 94434 89976

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement