Ad Code

Responsive Advertisement

திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்கள்: நிகழாண்டிலாவது கவுன்சிலின் அனுமதி கிடைக்குமா?

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் மருத்துவக் கவுன்சில் அனுமதி இதுவரை கிடைக்காததால் பெரும் தவிப்பில் இருக்கின்றனர் மாணவர்கள்.

திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியில் கடந்த 1997-ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியால் கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.

சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த இம்மருத்துவக் கல்லூரியில் 100 மாணவ, மாணவிகள் சேர்க்க அனுமதியளிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இளநிலைப் பிரிவில் 30-க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகின்றன. முதுநிலை மருத்துவப் படிப்பில் பொது மருத்துவம், மயக்கவியல் மருத்துவம், அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு உள்ளிட்ட பிரிவுகளில் 14-க்கும் மேற்பட்ட இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வின்போது மாணவர்களால் தேர்வு செய்யப்படும் கல்லூரிகளில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது இக்கல்லூரி.

இந்நிலையில், கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 100-லிருந்து 150 ஆக உயர்த்துவது என்ற அறிவிப்பு அரசு சார்பில் கடந்தாண்டு வெளியிடப்பட்டது. ஆனால், கடந்த நிதியாண்டில் அறிவிப்பு செயல்படுத்தப்படாமலேயே போய்விட்டது.

3 பேர் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் கடந்த மாதத்தில் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள வசதிகள், விடுதி வசதிகள், கட்டுமான வசதிகள் போன்றவை குறித்து 2 நாள்களாக ஆய்வு செய்து சென்றனர்.

அறிவிப்பு செயல்வடிவம் பெறுவது எப்போது?: அரசின் அறிவிப்பை செயல்படுத்தி மருத்துவக் கவுன்சிலின் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 50 இடங்கள் அதிகப்படுத்தப்படும்போது மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தின் மையப் பகுதியாக உள்ள திருச்சி கல்லூரியில் இடம் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. மொத்த இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தினால் பல மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கடந்த ஆண்டைப்போல இல்லாமல், நிகழாண்டில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதியை பெறுவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவக் கல்வி பயில விண்ணப்பித்து கலந்தாய்வுக்காக காத்திருக்கும் மாணவர்கள்.

விரைவில் அனுமதி கிடைக்கும்: தற்போது முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது. இன்னும் 2 கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில், மொத்த இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான அனுமதி இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசு மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement