Ad Code

Responsive Advertisement

பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை பெறுவது எப்படி?

பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த, ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை மட்டுப்படுத்த, ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தைகளின் மதிப்பை உயர்த்த முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகளையும் அரசு குழந்தைகள் காப்பகங்களின் மூலம் தங்கிப் படிக்க வழி செய்கிறது. இவற்றுக்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரை அணுகுவது? விவரங்கள் இங்கே:


i. சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்
ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் இல்லாத அல்லது தாயோ, தந்தையோ மட்டுமே உள்ள குழந்தைகள், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரால் பராமரிக்கப்பட முடியாத குழந்தைகள் மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள், பெற்றோர் இருவரும் உயிருடன் இருந்தும் தந்தை / தாய் கடும் மாற்றுத்திறனுடையோராக இருக்கும் குடும்பத்திலுள்ள குழந்தைகள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

வழங்கப்படும் உதவி:
உணவு, இருப்பிடம், கல்வி, சீருடை, இலவசப் பாடநூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், மருத்துவ வசதி, காலணிகள் மற்றும் படுக்கை வசதி அளித்தல்.

தகுதிகள்:
கல்வித் தகுதி இல்லை.
ஆண்டு வருமானம் ரூ.24,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பெண் குழந்தைகள் 5 வயது முதல் 18 வயது     வரை தங்கிப் பயில அனுமதிக்கப்படுவர்.
ஆண் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு வரை தங்கிப்  பயில அனுமதிக்கப்படுவர்.
பெற்றோர் இருவரும் இல்லாத பெண் குழந்தைகள் மேற்படிப்புக்காக 21 வயது வரை  அனுமதிக்கப்படுவர்.

எப்போது விண்ணப்பிப்பது?
கல்வி ஆண்டு தொடங்கும் முன்.

யாரை அணுகுவது?
கண்காணிப்பாளர், அரசு குழந்தைகள் காப்பகங்கள்,மாவட்ட சமூக நல அலுவலர்கள்,விரிவாக்க அலுவலர்கள் (சமூக நலம்),மகளிர் ஊர்நல அலுவலர்.

ii. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்
ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகள் பயன்பெறுவதற்கென இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகை நிலை வைப்புத் தொகையின் 20-ஆம் ஆண்டின் முடிவில் வட்டியுடன் சேர்த்து முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும்.  

திட்டம் i ஒரு பெண் குழந்தை மட்டும்
இத்திட்டத்தின்கீழ் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் ரூ.22,200- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் இருபது ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. தற்போது இந்தத் தொகையானது 01.08.2011 அன்றோ அதற்கு பிறகோ பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

திட்டம் ii இரண்டு பெண் குழந்தைகள் மட்டும்
இத்திட்டத்தின்கீழ் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.15,200- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் இருபது ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. தற்போது இந்தத் தொகையானது 01.08.2011 அன்றோ அதற்கு பிறகோ பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தகுதிகள்:
திட்டம் 1-ன்கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திட்டம் 2ன் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.24,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது.

விண்ணப்பிக்கும்போது பெற்றோர் / அவர்களின் பெற்றோர் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத்     தமிழ் அகதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:
01.04.2005 முதல் ஒரு பெண் குழந்தையாக இருப்பின்  அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இரண்டு பெண் குழந்தைகள் எனில்,  இரண்டாவது     குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
பிறப்புச் சான்று (மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகம் / நகராட்சியர் அலுவலகம்)

பெற்றோரின் வயதுச் சான்று (பிறப்புச் சான்று /பள்ளிச் சான்று / அரசு மருத்துவரின் சான்று)

குடும்ப நல அறுவைச் சிகிச்சை சான்று (சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை)

வருமானச் சான்று

ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) அல்லது ஊர் நல அலுவலர் / சென்னை மாவட்டம்     மட்டும்  வட்டாட்சியர் அலுவலகம்)

பிறப்பிடச் சான்று (விண்ணப்பிக்கும்போது பெற்றோர் / அவர்களது பெற்றோர் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்துள்ளனர் எனக் குறிப்பிட்டு வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட வேண்டும்.

அணுக வேண்டிய அலுவலர்:
மாவட்ட சமூக நல அலுவலர்கள்,விரிவாக்க அலுவலர்கள் (சமூக நலம்),மகளிர் ஊர் நல அலுவலர்.

குறிப்புகள்:
வைப்புத் தொகை ரசீது பெறப்பட்ட ஆறாம்     ஆண்டு முதல் சூ1,800 பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே     இறுதி முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும். அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு: மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். விண்ணப்பித்தும் உதவி கிடைக்கப் பெறாதவர்கள் இந்தியன் குரல் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும் 94443 05581


சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
ஆதரவற்ற பெண்கள் / விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனுடைய ஆண்கள் / பெண்கள், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிற மகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர் ஆகியோருக்கு இத்திட்டத்தில் தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

தகுதிகள்:
கல்வித்தகுதி இல்லை.
20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் சூ24,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய  சான்றிதழ்கள்:
ஆதரவற்றோர் / கைவிடப்பட்டவர் / விதவை / மாற்றுத்திறனுடையோர் என்பதற்கான சான்றிதழ்.
குடும்ப வருமானச் சான்றிதழ்
வயதுச் சான்றிதழ்
விண்ணப்பதாரர் தையல் தெரிந்தவர் என்பதற்கான சான்றிதழ்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement