Ad Code

Responsive Advertisement

கால்டுவெல் தமிழ்ப் பணியினை பெருமைப்படுத்தும் வகையில் அவரது இருநூற்றாண்டு நிறைவு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு ஆணை

முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ்ப் பணியினை பெருமைப்படுத்தும் வகையில் அவரது இருநூற்றாண்டு நிறைவு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்டுள்ளார்.
முதல்– அமைச்சரிடம் தென்னிந்தியத் திருச்சபை திருநெல்வேலி திருமண்டலப் பேராயர் ஜே.ஜே. கிருஸ்துதாஸ் தமிழறிஞர் கால்டுவெல் அவர்களின் இருநூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
தமிழறிஞர் கால்டுவெல் 7.5.1814-இல் அயர்லாந்தில் பிறந்து, 1891-இல் தமது 77-ஆவது வயதில் தமிழ்நாட்டில் கொடைக்கானல் மலையில் உயிர் துறந்தார். அவரது உடல் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் அவர் எழுப்பிய திருச்சபை ஆலயத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று 23-ஆவது வயதில் சமயப் பணிபுரிவ தற்காகத் தமிழகம் வந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் இடையன்குடியை இருப் பிடமாகக் கொண்டு தமிழ்ப்பணி ஆற்றி வந்த இவர் இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேலைநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகளிலும் போற்றத் தக்கப் புலமை பெற்றிருந்தார். அதன் பயனாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் ஒப்பிலா உயர் தமிழ் மொழியியல் ஆய்வு நூல் ஒன்றை எழுதினார். தனித்து இயங்கக் கூடியது தமிழ் எனத் தக்க சான்று காட்டித் தருக்க முறையில் அறுதியிட்டு உறுதி கூறியவர் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல்.
இந்நூலே, தமிழ் மொழியின் மொழியியல் ஆய்வுக்கு முன்னோடியாக அமைகிறது. திராவிட மொழிகள் ஒரு தனியினம், அவற்றிற்குத் தாய் தமிழே என விளக்கி உலகுக்கு உணர்த்தி மொழியியல் ஆராய்ச்சியில் நமக்கு வழிகாட்டிய விடிவெள்ளி ஆவார். திராவிட மொழிகட்குப் புத்துயிர் அளித்தவர். இவரது ஒப்பிலக்கண ஆய்வு பணியைப் பாராட்டி, சென்னைப் பல் கலைக்கழகமும், இராயல் ஏசியாடிக் சொசைட்டியும் அவருக்கு “இலக்கிய வேந்தர்”, “வேத விற்பன்னர்” என்ற பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்தின. எத்தனையோ பேர் கூடிச் செய்ய இயலாப் பெரும்பணியை, எத்தனையோ பிறவி எடுத்துச் செய்யும் தமிழ்த் தொண்டினை ஒரு பிறவியில் ஒருவராகவே இருந்து செய்து, செந்தமிழை உலகறிய - உலகவர் தொழச் செய்தார்.
தமிழ்மொழி நூல் ஆய்வுக்கு முன்னோடியாக இருந்த தமிழறிஞர் கால்டுவெலை பெருமைப்படுத்தும் வகையிலும் அவரது இருநூற்றாண்டை சிறப்பிக்கும் வகையிலும் அவரின் இருநூற்றாண்டு நிறைவு நாளான 7.5.2014 அன்று காலை 9.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் அமைந்துள்ள நினைவில்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலையணிவித்து பெருமைப்படுத்தவும், சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து பெருமைப்படுத்தவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மேலும் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ்ப் பணியைப் பாராட்டும் வகையில் ஆண்டு தோறும் சென்னை, காமராசர் சாலையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து பெருமைபடுத்தவும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Ad Code

Responsive Advertisement