Ad Code

Responsive Advertisement

சென்னை பல்கலையில் அறிமுகமாகிறது ஹிந்தி

நாடு முழுவதும், அனைவருக்கும் ஹிந்தி மொழி தெரியும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளும், அனைத்து மாநிலங்களிலும், ஆங்கிலத்துடன், கட்டாயமாக, ஹிந்தியிலும் இடம் பெற உத்தரவிடப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைகளில், ஹிந்திக்கும் முக்கியத்துவம் தர, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள பல்கலைகளில், பட்டம் பெறும் பட்டதாரிகள், அனைத்து மாநிலங்களிலும், வேலை வாய்ப்புகளை பெறும் வகையில், அவர்களுக்கு ஹிந்தி கற்றுத்தர, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, விருப்ப மொழி பாடமாக, முதுநிலை மாணவர்களுக்கு, ஹிந்தியை அறிமுகம் செய்கிறது. முதற்கட்டமாக, சென்னை பல்கலையில், ஹிந்தி திட்டம் அமலுக்கு வர உள்ளது. இரு வாரங்களுக்கு முன், சென்னை பல்கலையின் மேலாண்மை படிப்பு துறையின் வேலைவாய்ப்பு தகவல் கையேடு வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற பல்கலை துணைவேந்தர் துரைசாமி, ''ஆங்கில மொழியுடன், இன்னொரு சர்வதேச மொழி; தமிழ் அல்லது தற்போது மாணவர்கள் படிக்கும் மாநில மொழியுடன், மற்றொரு தேசிய மொழியும், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும். இதை, விருப்ப மொழியாக மாணவர்கள் எடுக்கலாம்,'' என்றார்.

இது குறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தேசிய மொழி என்றால் பெரும்பாலான மாணவர்கள், ஹிந்தி படிக்க ஆர்வமாக உள்ளனர். இது குறித்து, சென்னை பல்கலையின் சிண்டிகேட் மற்றும் அகாடமிக் கவுன்சிலில் ஒப்புதல் பெற்று, அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும்' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement