Ad Code

Responsive Advertisement

ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவி!


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும்  மாணவி, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈடாக ஆங்கிலத் திறனை வளர்த்து, முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.




தங்கள் பிள்ளைகள் ஆங்கில மொழித் திறன் பெற வேண்டும் என்பதற்காகவே, பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடி வருகின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளிலும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பாக ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் திண்டிவனம் அருகே உள்ள கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் மாணவி காவ்யா.
இவர், 5-ஆம் வகுப்பு மாணவருக்கு ஈடாக ஆங்கில மொழித் திறனில் அசத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்ந்து ஒரு மாதமே ஆன மாணவி காவ்யா, தன் மழலைக் குரலால் ஆங்கில எழுத்துகளை அதிவேகமாக உச்சரிப்பது, எழுதுவதுடன், ஆசிரியர் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு, அழகாக பதில் அளித்து ஆச்சரியப்படுத்துகிறார். ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தத்தையும் கூறுகிறார்.
இதுதொடர்பாக அந்தப் பள்ளி ஆசிரியர் ச.சுகதேவ், மாணவி காவ்யாவிடம் ஆங்கிலத்தில் உரையாடிய விடியோவை பள்ளியின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து ஆச்சர்யப்படும் பெற்றோர்கள் பலர் காவ்யாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, அந்தப் பள்ளி ஆசிரியர் ச.சுகதேவ் கூறியதாவது:
கடந்த ஆண்டு பள்ளி வயதை எட்டாத நிலையில் வீட்டில் தனியாக இருந்த காவ்யா, இதே பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்த தனது அக்காள் பிரியதர்ஷனியுடன் பள்ளிக்கு வந்து சென்றார்.
அப்போது மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை உற்று நோக்கி வந்த காவ்யாவுக்கு, பிற மாணவர்களைப் போல் சொல்லிக் கொடுத்து வீட்டுப் பாடம் எழுதிவரச் செய்தேன். அவரும் ஆர்வத்துடன் எழுதி வந்து காண்பித்தார். பின்னர் பொனெடிக் முறையில் ஆங்கில உச்சரிப்பையும் விரைவாகக் கற்றுக்கொண்டார்.
இந்தாண்டு முறைப்படி முதல் வகுப்பில் சேர்ந்த காவ்யா, ஆங்கில வார்த்தைகளை உரிய உச்சரிப்புடன் சரளமாக வாசிப்பதும், எழுதுவதும் என்று 5-ஆம் வகுப்பு மாணவருக்கு ஈடாக திறன் பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் திறன் பெறுவது கடினம் என்ற மனப்பான்மையை இதுபோன்ற மாணவர்கள் தகர்த்து வருகின்றனர் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement