Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக்கை கற்றல், வாசிப்புத் திறனை மேம்படுத்த திட்டம்

புதுச்சேரி அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறனை மேம்படுத்த, 'மேத்ஸ் கார்னர்' விரைவில் துவக்கப்பட உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக, ஐந்தாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம் அமலில் உள்ளது.
ஆனால், இது சில நேரங்களில் எதிர்மறையாக அமைந்து விடுகிறது.
பாஸ் செய்து அடுத்தடுத்த வகுப்புகளில் காலடி எடுத்து வைத்தும், மாணவர்கள் குறைந்தபட்ச கற்றல் திறன்கூட இல்லாமல் உள்ளனர். குறிப்பாக, பத்தாம் வகுப்பு வந்தும்கூட மாணவ, மாணவியரில் சிலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுகின்றனர்.தமிழ் மொழியை வாசிக்கத் திணறும் இந்த மாணவர்கள் கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்களைப் படிப்பது கடினமாகும்.எனவே, தனி கவனம் எடுத்து தமிழில் தவறின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும், கணிதம் கற்றுத் தருவதும்அவசியமாகிறது.இதற்காக, புதுச்சேரி அரசு துவக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் வாசிப்புடன் கூடிய 'மேத்ஸ் கார்னர்' துவங்க, திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, மத்திய அரசின் சர்வ சிக்க்ஷா அபியான் திட்டத்தின் துணை திட்டமான 'பதே பாரத்; படே பாரத்' (படிக்கும் இந்தியா; முன்னேறும் இந்தியா) திட்டத்தின் கீழ், ரொக்கமில்லாத பரிவர்த்தனை முறையில் 5 ஆயிரம் ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் சுகாதார துாதர் திட்டம் அறிமுகம் செய்து, கழிப்பறை சுகாதாரம் குறித்து கண்காணிக்கப் பட்டது.
இதற்கு, நல்ல பலன் கிடைத்தது. அதேபோன்ற நடைமுறையை 'மேக்ஸ் கார்னர்' விஷயத்திலும் நடைமுறைப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வாசிப்பு துாதர் என, ஒரு மாணவர் நியமிக்கப்பட உள்ளார்.இந்த 'ஹைக்டெக்' திட்டத்தின் மூலம், புதுச்சேரி பிராந்தியத்தில் 5117 மாணவர்கள், காரைக்கால்- 1859, மாஹி-505, ஏனாம்-775 என, ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் 8,256 பேர் பயனடைய உள்ளனர்.அதன்படி, 3,993 மாணவர்கள், 4,263 மாணவிகளுக்கு எழுதவும், வாசிக்கவும், கணிதத்தில் சாதிக்கவும் கற்றுக்த் தரப்பட உள்ளது. இதற்காக, 2 ஆயிரம் புத்தகங்கள் கதைகளுடன் கூடிய கல்வி நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.என்.சி.இ.ஆர்.டி., புதுச்சேரி மாநிலத்தில் மூன்றாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும் ஆய்வு நடத்தியது.

இரண்டு வகுப்புகளிலும், தேசிய சராசரியை காட்டிலும் புதுச்சேரி துவக்கப் பள்ளி மாணவர்கள் மேலோங்கியே இருந்தனர்.மூன்றாம் வகுப்பில் தேசிய அளவில் மொழிப்பாட கற்றல் திறன் 64 மதிப்பெண் ஆக இருந்தபோது, புதுச்சேரி மாணவர்களின் கற்றல் திறனில் 73 மதிப்பெண் ஸ்கோர் செய்து சாதித்தனர். கணிதத்தில், தேசிய சராசரி 60 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 75 மதிப்பெண் பெற்று, முத்திரை பதித்தனர்.ஐந்தாம் வகுப்பிலும் கணித பாடத்தில் தேசிய சராசரி 241 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 246 மதிப்பெண் ஸ்கோர் செய்திருந்தனர்.தற்போது, ஒன்றாம், இரண்டாம் வகுப்பில் வாசிப்புடன் கூடிய 'மேக்ஸ் கார்னர்' விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் சாதிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement