Ad Code

Responsive Advertisement

'மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெற்றாலும் சம்பள கமிஷன் மூலம் பலன் கிடைக்கும்'

மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெற்றாலும், ஏழாவது சம்பள கமிஷன் மூலம் பலன் கிடைக்கும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

உத்தர பிரதேசம், லக்னோவில் மத்திய பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.,) வீரராக பணிபுரிபவர் முருகன். இவரது மனைவி மதுரை செல்லுார் தமிழரசி. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மதுரை குடும்பநல நீதிமன்றம், 'தமிழரசிக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு தொகையை முருகன் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதை எதிர்த்து முருகன், 'தமிழரசி, நான்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். மேலும், தனியார் நிறுவனத்தில், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஒரு மகன் ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: தமிழரசிக்கு, வீட்டு வாடகை மூலம் வருமானம் கிடைக்கிறது; அவர், தனியார் நிறுவனத்தில், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் மற்றும் மகன் வருவாய் ஈட்டுகிறார் என்பதை, ஆதாரப்பூர்வமாக மனுதாரர் நிரூபிக்கவில்லை. மனுதாரர் பெறும் சம்பளத்தின் அடிப்படையில், 10 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு தொகையை கீழமை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. 

மனுதாரர் மத்திய அரசு ஊழியர்; அவர் தற்போது பெற்று வரும் சம்பளம் குறையப்போவதில்லை. விரைவில் ஓய்வுபெற உள்ளார். அவருக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் உட்பட ஓய்வூதிய பலன்கள் பெரிய தொகையாக கிடைக்கும். மேலும், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை அமலாகும்போது, மனுதாரருக்கு சம்பளம், பணிக்கொடை உட்பட சலுகைகள் அதிகரிக்கும். அது, ஓய்வூதியத்திலும் பிரதிபலிக்கும். மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement