Ad Code

Responsive Advertisement

மாநகராட்சிப் பள்ளியில் மாணவியர் சேர்க்கைக்கு அலைமோதிய கூட்டம்! தனியார் பள்ளிகளை விஞ்சியது

திருநெல்வேலி மாநகராட்சி மகளிர் பள்ளியில் மாணவிகள் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் பெற்றோர், மாணவிகள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது. திருநெல்வேலி மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் 5 ஆயிரம் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 


ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் இந்தப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். இதனால், ஆண்டுதோறும் மாணவிகள் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
 


இதேபோல், 2016-17ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலேயே கூட்டம் அலைமோதியது. மே 23-ஆம் தேதிமுதல் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலையே மாணவிகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிடத் தொடங்கினர். திருநெல்வேலி நகரம், பேட்டை, பாட்டப்பத்து, பழைய பேட்டை, திருவேங்கடநாதபுரம், சுத்தமல்லி என நகரத்தின் பெரும்பான்மை பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளும் இந்தப் பள்ளிக்கு படையெடுத்தனர்.
 


6-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மட்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர். இதேபோல, 9ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 100-க்கும் மேற்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர்.
 


6ஆம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலவழியில் 13 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 55 முதல் 60 மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இதேபோல, 9ஆம் வகுப்பிலும் தமிழ், ஆங்கிலப் பிரிவுகள் உள்ளன. திங்கள்கிழமை நடைபெற்ற முதல்நாள் சேர்க்கையில் தமிழ், ஆங்கில வழியில் 6ஆம் வகுப்பில் 400 மாணவிகளுக்கு சேர்க்கை நடைபெற்றது. 9ஆம் வகுப்பில் 50 மாணவிகள் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து சேர்க்கை நடைபெறுகிறது.
 


இதுதொடர்பாக, பள்ளியின் தலைமையாசிரியை நாச்சியார் ஆனந்த பைரவி கூறியது:
 


தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக பொதுத் தேர்வில் தொடர்ந்து மாநில இடங்களையும், மாவட்ட இடங்களையும் பெற்று வருகிறோம். 10ஆம் வகுப்பில் கடந்தாண்டு மாநில அளவில் 2 மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனர்.
 


இப்போது பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மாநகராட்சிப் பள்ளி வரிசையில் முதல் 3 இடங்களையும் எங்களது பள்ளி பிடித்துள்ளது. மாணவியர் சேர்க்கைக்கான கட்டணத்தை (ரூ.50, ரூ.200) தவிர வேறு எந்தக் கட்டணமும் இல்லை. அனைத்தும் அரசே இலவசமாக வழங்குகிறது. எனவேதான் சேர்க்கையின்போது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாணவிகளிடமும் பள்ளிக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement