Ad Code

Responsive Advertisement

'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அதிகரிப்பு: என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; 'படிப்பு அவசியம் இல்லை' என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பள்ளியில் சேர்க்க பணம் இல்லாமை, வீட்டு வேலைகள் போன்ற பல்வேறு காரணங்களால், சிறுவயதில் பள்ளியில் சேர முடியாமல் போவது சகஜம். மாறாக, படிப்பு அவசியம் இல்லை என நினைப்பதால், பெரும்பாலானோர் பள்ளியில் சேர்ந்து படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாக, என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய மாதிரி கணக்கீட்டு அலுவலக ஆய்வில் தெரியவந்துள்ளது.


இதுகுறித்து, என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:5 வயது முதல், 29 வயது வரையுள்ள நபர்களிடம், பள்ளிப்படிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 100 பேரில், 13 பேர், படிப்பு அவசியம் இல்லை எனக் கருதுவதால், பள்ளியில் சேரவில்லை என்றோ, படிப்பை பாதியில் விட்டு விட்டதாகவோ தெரிவித்தனர். 10 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகளிடையே, இந்த விகிதாச்சாரம் மிக அதிகமாக காணப்பட்டது. இந்த பிரிவில், மூன்று பேரில், ஒருவர், படிப்பு அவசியம் இல்லை எனக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


10 ஆண்டுக்கு முன், இதே போன்று நடந்த ஆய்வில், நான்கில் ஒருவர் மட்டுமே, இதுபோன்ற பதிலை அளித்திருந்தனர். கிராமப்புறங்களில் அதிகமாக, 34.8 சதவீதம் பேர், பள்ளிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. நகர்ப்புற குழந்தைகளை பொறுத்தவரை, 22.8 சதவீதம் பேர், பள்ளிப் படிப்பு அவசியமில்லை எனக் கூறி உள்ளனர். அதேசமயம், வயது அதிகமானோரில், குறைந்த விகிதத்தினரே, படிப்பு அவசியமில்லை எனத் தெரிவித்தனர். 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட, பள்ளிக்கு செல்லாத ஒவ்வொரு 100 பேரில், 17 பேர் மட்டுமே, 'பள்ளி படிப்பு அவசியமில்லை' எனத் தெரிவித்தனர். 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 12 சதவீதத்தினரே, இந்த பதிலை கூறியிருந்தனர். 

மொத்தத்தில், 5 வயது முதல், 29 வயதுக்கு உட்பட்டோரில் பெரும்பாலானோர், வீட்டில் போதிய வருவாய் இல்லாமையால், படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். இந்த காரணத்தை, 36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 26 சதவீதம் பேர், வீட்டு வேலைகளை கவனிக்க, படிப்பை விட்டதாக தெரிவித்துள்ளனர். 

பெண்களில் 50 சதவீதம் பேர், வீட்டு வேலைகளை கவனிக்க, படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். பெரும்பாலான பெண்கள், திருமணம் காரணமாக, படிக்க தொடர முடியவில்லை. 
உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில், பெண்களுக்கு திருமணம் செய்யும் வயது, குறைவாக உள்ளது. அதனால், சிறுவயதிலேயே, பெண்களின் படிப்பை நிறுத்தி விட்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். 

கிராமப்புறங்களில், இவ்வழக்கம் அதிகமாக உள்ளது. ஆண்களை பொறுத்தவரை, 15 வயது ஆனபின், வீட்டுத் தேவைக்கு சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தால், படிப்பை பாதியில் கைவிடுவது அதிகமாக உள்ளது. சொந்த மாநிலங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு, கல்வி வசதி எளிதாக கிடைப்பதில்லை. இருப்பிடச் சான்று, இடமாற்று சான்று போன்ற நடைமுறை சம்பிரதாயங்கள், இவர்களின் கல்விக்கு தடைக்கல்லாக உள்ளன. இவ்வாறு, என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, டில்லி ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த, துணை பேராசிரியர் ஜெயன் ஜோஸ்தாமஸ் கூறுகையில், 'நாட்டில் கல்விக்கான தேவை, அதிகமாகி உள்ளது. அதிகம் பேர், பள்ளிகளுக்கு செல்லத் துவங்கி உள்ளனர். ஆனால், கல்வி கட்டமைப்பு, தரம், ஆசிரியர்களின் திறன், போன்றவை, குறிப்பிடும்படி இல்லை; எனவே, பலர், பாதியில் படிப்பை விட்டு விடுகின்றனர்' என்றார். 

டில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணை பேராசிரியர் ஹிமான்ஷு கூறுகையில், 'நாட்டின் கல்வி முறை, படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இல்லை. பள்ளி, கல்லுாரிகளை மாற்றுவதை விட, செய்யும் வேலையை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். பள்ளிக்கு நீண்ட காலம் செல்லாத குழந்தை, மீண்டும் பள்ளியில் சேர்வது மிகக் கடினம்' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement