Ad Code

Responsive Advertisement

கூடுதல் கட்டணம் செலுத்தாததால் மாணவர்களை மைதானத்தில் நிற்க வைத்த பள்ளி

கோவையில், அரசு நிர்ணயித்ததைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்புக்குள் அனுமதிக்காமல் மைதானத்தில் நிற்க வைத்த பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அன்னூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது குழந்தைகள் எம்.கெளதம், கெளசல்யா ஆகியோர் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 2-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர்.

  இந்நிலையில் மணிகண்டன், அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணம்தான் இப்பள்ளியில் வசூலிக்கப்படுகிறதா என்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். ஆனால், இதற்கு பதிலளிக்காத பள்ளி நிர்வாகம், பழைய நிலுவை கட்டணத்தை செலுத்தும்படி அவரிடம் கேட்டுள்ளனர்.  இதையடுத்து அவர், கடந்த ஜூன் 7-ஆம் தேதி ரூ. 7,500 செலுத்தியுள்ளார்.
  நிகழாண்டுக் கல்விக் கட்டணமாக கெளதமிற்கு ரூ. 12,650-ம், கெளசல்யாவுக்கு 13,250-ம் செலுத்தும்படி பள்ளி நிர்வாகம் கேட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணம் குறித்து மணிகண்டன் மீண்டும் கேள்வி எழுப்பிய நிலையில், கடந்த 8-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற அவரது குழந்தைகள் இருவரையும் பள்ளி நிர்வாகம் வகுப்புக்குள் அனுமதிக்காமல், மைதானத்தில் நாள் முழுக்க காத்திருக்க வைத்து, வீட்டுக்கு அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் கீதாவிடம் அவர் புகார் தெரிவித்தார். ஆனாலும், இக்குழந்தைகளை மீண்டும் வகுப்பில் சேர்ப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மணிகண்டன் தனது குழந்தைகளுடன் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று வியாழக்கிழமை புகார் மனு அளித்தார்.
  இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் குறித்து விசாரித்ததற்காக, எனது குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து விடுவதாக மிரட்டி, அவர்களை மைதானத்தில் நிற்க வைத்தும், வகுப்புக்கு அனுப்பாமலும் வெளியேற்றிய தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
மாணவரின் தேர்வு முடிவை வெளியிட மறுப்பு: கோவை மசக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது மனைவி தனலட்சுமி. இவர், விளாங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அங்கு, இவர்களது மகன் ஜெ.அஜயும் முதல் வகுப்பு படித்து வந்தார்.
  இந்நிலையில், மாணவர்களைக் கட்டாயப்படுத்தி ரூ. 2 ஆயிரம் வசூலித்துக் கொண்டு, காலணி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சக மாணவர்களின் பெற்றோருடன் சேர்ந்து ஜெகதீஸ்வரனும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்தாராம்.
   இதனால், தனலட்சுமியை பள்ளி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  பணியில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், அஜயின் தேர்வு முடிவுகளை பள்ளி நிர்வாகம் வெளியிடவில்லை.
 இந்நிலையில், நிகழாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 3-ஆம் தேதி தனது மகனை அழைத்துச் சென்ற ஜெகதீஸ்வரனை பள்ளி நிர்வாகிகள், ஊழியர்கள் விரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த ஜெகதீஸ்வரன், முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகியோரிடமும் புகார் கொடுத்துள்ளார். இவ்விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அவர் தனது குடும்பத்தாருடன் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சென்று அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார்.
  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது மகனைப் பழிவாங்கும் பள்ளி நிர்வாகம், மாணவர் சேர்க்கையின்போது செலுத்திய ரூ. 40 ஆயிரம் நன்கொடையை திரும்ப வழங்க மறுக்கிறது. இது குறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடம் புகார் அளித்தபோது, தனியார் பள்ளிகளை பகைத்துக் கொள்ள முடியாது என்று அவர் பகிரங்கமாகக் கூறுகிறார். இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் அளிக்க வியாழக்கிழமை காத்திருந்தும் அவரை சந்திக்க முடியவில்லை' என்றார்.
 இரு தனியார் பள்ளிகள் மீது கல்விக் கட்டணம் தொடர்பாக பெற்றோர்கள் புகார் அளித்திருப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகனிடம் கேட்டபோது, இது தொடர்பாக விசாரணை நடத்த மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் கீதாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement