Ad Code

Responsive Advertisement

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 வினாத்தாள் கட்டுகளுக்கு 24 மணிநேர பாதுகாப்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் நிற்கிறார்கள்

பிளஸ்-2 வினாத்தாள் கட்டுகளை பாதுகாக்க 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் விழிப்புடன் காவல் காத்து வருகிறார்கள்.


பிளஸ்-2 தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடங்கி மார்ச் 31-ந்தேதி முடிவடைகிறது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 19 பேர் முதல் இடம் பிடித்தனர். அவர்களில் அரசு பள்ளி மாணவி பஹீரா பானு என்ற மாணவியும் முதல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க

இந்த ஆண்டும் அதுபோல தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க அவர் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். இதற்காக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு நடத்த உத்தரவிட்டார். அதன்படி சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜனும் தேர்வு நடத்துவதில் பல்வேறு புதுமைகளை கடந்த ஆண்டே புகுத்தினார். அதன்படி விடைத்தாள் முகப்பு தாளில் மாணவர்கள், அவர்களின் தேர்வு எண்ணை எழுதத்தேவை இல்லை. அவரது புகைப்படமும் ஸ்கேன் செய்யப்பட்டு முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் எந்த மாணவரும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத முடியாது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த வருடம் பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடங்க உள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களுக்கும் பிளஸ்-2 வினாத்தாள் கட்டுகள் அனுப்பப்பட்டன. அவற்றை அந்தந்த மாவட்டங்களில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் பல்வேறு மையங்களில் உள்ள பீரோக்களில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

வினாத்தாள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருக்க அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி அந்தந்த மாவட்டத்தில் இருந்து போலீசார் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வினாத்தாள் மையங்களை விழிப்புடன் காவல் காத்து வருகிறார்கள்.

முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் தினமும் வினாத்தாள் கட்டு மையங்களை தினமும் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement