Ad Code

Responsive Advertisement

இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

இடஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சக்ஷம் தொண்டு நிறுவனம் சார்பில் சக்ஷம் தக்ஷின் தமிழ்நாடு என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் காமாட்சியம்மன் மண்டபத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

திருப்பூர் ஸ்ரீவாரி அறக்கட்டளைத் தலைவர் கே.பி.ஜி.பலராமன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.சீனிவாசன் வரவேற்றார். சக்ஷம் அமைப்பின் தேசியச் செயலர் கமேஷ்குமார், தேசியச் செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக் குழுத் தலைவர் கேசவவிநாயகன் உள்ளிட்டோர் பேசினர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

6 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் அனைவருக்கும் அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளிலும் இலவசக் கல்வி பெற்றிடவும், அரசுப் பணிகளுக்குச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய வட்டியில்லா கடனுதவியும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி உயர்வு வழங்கிடவும், உயர்கல்வி, வேலை வாய்ப்புகள், இதர அரசு நலத்திட்டங்கள் பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்திடவும் வேண்டும்.

உயர்கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்புச் சலுகை 5 ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகளாக உயர்த்திடவும் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும்.

நூறு சதவீதம் உடல்குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளின் மனைவி, குழந்தைகளில் ஒருவருக்கு அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலைகளில் முன்னுரிமை அளித்திடவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானவரி, தொழில்வரி, சேவைவரி உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement