Ad Code

Responsive Advertisement

நோட்டுப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நோட்டு புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இக்கல்வி ஆண்டுக்கான ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி. வரையிலான வகுப்புகளுக்கு முதல் பருவ பாட புத்தகம் ஏற்கனவே ஈரோடு வந்து சேர்ந்தது. பள்ளி கல்வி துறை தேவை பட்டியல்படி, புத்தகங்களை அச்சிட்டு பல்வேறு பதிப்பகங்கள் நேரடியாக ஈரோடு மாவட்டத்துக்கான புத்தகங்களை கொண்டு வந்து பள்ளி கல்வி துறையிடம் ஒப்படைத்தது.
கடந்த இரு மாதங்களாகவே புத்தகங்கள் வர துவங்கின. இம்மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. தேவையான அளவு புத்தகங்கள் வந்ததை தொடர்ந்து ஏற்கனவே கோபி கல்வி மாவட்டத்துக்கான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கல்வி மாவட்டத்துக்கான புத்தகங்கள் ரயில்வே காலனி அரசு மேல்நிலை பள்ளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் முதல், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் அரசு நிதியுதவி நகரவை மற்றும் சுயநிதி என 234 பள்ளிகள் உள்ளன.
ஈரோடு கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை ஆறாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கில பாடம் அடங்கிய வால்யூம் ஒன்று, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடம் அடங்கிய வால்யூம் இரண்டு சேர்த்து மொத்தம் 15,150 புத்தகங்கள் வந்துள்ளன. இதேபோல் ஏழாம் வகுப்புக்கு 12,140, எட்டாம் வகுப்புக்கு 15,540 புத்தகங்கள் வந்துள்ளன.

ஒன்பதாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கில பாடம் அடங்கியது வால்யூம் ஒன்று, அறிவியல், சமூக அறிவியல் அடங்கியது வால்யூம் இரண்டு, கணக்கு பாடம் அடங்கியது வால்யூம் மூன்று என மொத்தம் மூன்று வால்யூம்கள் உள்ளன. மொத்தம் 33,555 புத்தகங்கள் வந்துள்ளன. இதேபோல் எஸ்.எஸ்.எல்.ஸி.க்கு 60,000 புத்தகங்கள் வந்துள்ளன.
சில பாட புத்தகங்கள் குறைந்த அளவில் வந்துள்ளன. அதுபோல் நோட்டுகள் 75 சதவீதம் மட்டுமே வந்துள்ளன. ஓரிரு நாளில் லாரி மூலம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசால் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் இலவச சீருடைகளும் வர வேண்டியுள்ளது. இவை விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்த்துள்ளனர்.
மொடக்குறிச்சி யூனியன் பகுதி பள்ளிகளுக்கு நேற்று முன்தினமும், சென்னிமலை யூனியன் பகுதி பள்ளிக்கு நேற்றும் பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன. இன்று ஈரோடு யூனியன் பகுதி பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணி 29ம் தேதிக்குள் நிறைவு பெறும். அதன் பின் பற்றாக்குறை இருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தேவை குறித்து தெரிவிக்க வேண்டும்.
அதன்படி பள்ளி கல்வி துறையினர் புத்தகங்களை பெற்றுத் தருவர். ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் அன்றைய தினமே அனைத்து பள்ளிகளிலும் பாட புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement