Ad Code

Responsive Advertisement

9 முதல் 12ம் வகுப்பு வரை நவோதயா பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா?: ஐகோர்ட் கிளை கேள்வி

நவோதயா பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில், தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயக்குமார் தாமஸ். குமரி மகா சபா செயலாளரான இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்  செய்த மனு: ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 1986ல் ஜவஹர் நவோதயா வித்யாலயா கல்வி முறை நாடு முழுவதும்  அறிமுகமானது. இந்த கல்வி முறை இதுவரை தமிழகத்தில் அமலாகவில்லை. எனவே, மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளை  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் துவக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘தமிழகத்தில் நவோதயா பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மொழி பாடமே இல்லை. எனவே  நவோதயா பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை’ என தெரிவிக்கப்பட்டது. மனுதாரரர் தரப்பில், ‘நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டால், ஒரே மாதிரியான  கல்வி பெற முடியும்’ என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, ‘தேவையான நிலமும், சுமார் 250 மாணவர்களுடன் பள்ளி இயங்கக்கூடிய வகையிலான தற்காலிக கட்டிடமும்  கொடுத்தால் உடனடியாக பள்ளிகள் துவக்க மத்திய அரசு தயாராக உள்ளது. சொந்த கட்டிடம் கட்டியதும் தற்காலிக கட்டிடம் சம்பந்தப்பட்டவர்களிடம்  ஒப்படைக்கப்படும்’ என்றார். 

இதையடுத்து, ‘நவோதயா பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில் தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா என்பது குறித்து மத்திய அரசுடன்  ஆலோசித்து, நவோதயா சமிதி சார்பில் தெரிவிக்க வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆக. 29க்கு தள்ளி வைத்தனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement