Ad Code

Responsive Advertisement

முதல் நாள் ஜி.எஸ்.டி.., ஒரு சாமான்யனின் புலம்பல்!

சென்னை ஹோட்டல் ஒன்றில் ஜூலை 1-ஆம் தேதி காலை பொங்கல் மற்றும் காபி சாப்பிட்டவருக்கு வரவேண்டிய 75 ரூபாய் 'பில்' ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் 88 ரூபாய் 50 காசுகளாக வந்திருக்கிறது.

ஹோட்டலில் சாப்பிட்டவருக்கு வரியாக மட்டும் 13 ரூபாய் 50 காசுகள் போடப்பட்டுள்ளது. அந்த 'பில்'-தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. தங்களுக்குப் பிடித்த உணவை ஹோட்டல்களில் சாப்பிட்டுவந்த மக்கள், இனி 'கையேந்தி பவனே கதி' என்றுதான் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. சென்னையில் மிகப் பிரபலமான அந்தஹோட்டல் தரப்பிலிருந்து நம்மிடம் பேசியவர்கள், "சேவை வரி, வாட் உள்பட எதையும் பில்லில் நாங்கள் சேர்க்கவில்லை. அப்படி சேர்க்கவும் முடியாது. மத்திய, மாநில அரசுகளின் வரிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது" என்றனர்.
சாப்பிட்ட 'பில்'-லை சமூகவலைத்தளங்களில் விட்டவர், இன்றுகாலை நெய் பொங்கல் சாப்பிட அந்த ஹோட்டலுக்குப் போயிருக்கிறார். நெய் பொங்கல் சாப்பிட்டவருக்கு, அப்படியே காபி குடிக்கவும் ஆசை வர....அதையும் சாப்பிட்டிருக்கிறார். இந்தியாவுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்ததுபோல், நள்ளிரவில் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்த விஷயம், அவரின் காலைநேரப் பசி மறக்கவைத்து விட்டிருக்கிறது. சாப்பிட்டு முடித்த அவரிடம், ''நீங்கள் சாப்பிட்ட பொங்கலுக்கு 50 ரூபாயும், காபிக்கு 25 ரூபாயும், சி.ஜி.எஸ்.டி-யாக (மத்திய அரசு வரிதான் மக்களே), 6.75 ரூபாய் எஸ்.ஜி.எஸ்.டி. வரியும் (மாநில அரசின் வரி) கட்டணமாகச் சேர்க்கப்பட்ட வகையில், உங்களுக்கான பில் 88.50 ரூபாய் வருகிறது'' என்று சொல்லி, கணினி 'பில்' வழங்கப்பட்டுள்ளது. பில்லுக்குக் கீழே வழக்கம்போல், 'நன்றி மீண்டும் வருக' என்று அழைப்பு வேறு. அதுதான் சாப்பிட்ட மனிதரை கொதிக்க விட்டிருக்கிறது.பொங்கல் சாப்பிட ஆசைப்பட்ட அந்த நபரிடம் இதுகுறித்துப் பேசினோம். "இது நான் எதிர்பார்க்காத ஒன்று. ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, ஆதரவு என்றெல்லாம் செய்தியில் பார்த்துள்ளேன். அது, 'சாப்பிடுகிற பொங்கல்வரைக்கும் வரும்' என்று எதிர்பார்க்கவில்லை’' என்று அங்கலாய்த்தார்.

ஹோட்டல் உணவுப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் டி.சீனிவாசன், "சாதாரண ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு இரண்டு சதவிகித வாட் வரியும், ஏ.சி வசதி உள்ள ஹோட்டல்களில் இரண்டு சதவிகித வாட் வரியும் மற்றும் ஆறு சதவிகித சேவை வரியும் விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில், '20 லட்சம் ரூபாய்க்கும்மேல் 50 லட்சம் ரூபாய்வரை ஆண்டு வருமானம் உள்ள ஹோட்டல்களுக்கு ஐந்து சதவிகிதமும், 50 லட்சம் ரூபாய்க்குமேல் வருமானம் உள்ள ஹோட்டல்களுக்கு 12 சதவிகிதமும், ஏ.சி வசதி உள்ள ஹோட்டல்களுக்கு 18 சதவிகிதமும் வரி விதிக்கப்படும்' என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேட்டரிங் சேவைகளுக்கு 18 சதவிகித வரி விதிப்பால், ஹோட்டல் உணவுப் பொருள்களின் விலை மிகவும் அதிகமாகும். காய்கறி விலை உயர்வினால், ஒருபக்கம் ஹோட்டல் தொழில் நெருக்கடியில் உள்ளது. மறுபக்கம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு இதை மேலும் சிக்கலாக்கும். சாதாரண ஹோட்டல்களுக்கு இரண்டு முதல் ஐந்து சதவிகிதமும், ஏ.சி வசதி உள்ள ஹோட்டல்களுக்கு அதிகபட்சமாகப் பத்து சதவிகிதமும் என்றளவில் வரி விதித்தால் மட்டுமே ஹோட்டல் தொழிலை நடத்த முடியும். வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க முடியும்" என்றார்.

சாதாரணமாக, இதை ஏதோ ஹோட்டல் முதலாளிகளின் பிரச்னை என்பதுபோல் பார்த்துவிட்டுப்போன பலநூறு பேரில் ஒருவர், கண்டிப்பாக இன்று அவருக்குப் பிடித்தமான ஹோட்டலில் ஏதோ ஓர் உணவைச் சாப்பிட்டிருப்பார்... அதே ஹோட்டலில், இனி உணவைத் தொடர்வதா அல்லது மாற்று வழி ஒன்றைத் தேடுவதா என்பதை அவருக்கு வந்த 'பில்'தான் தீர்மானித்திருக்கும்.'ஏழை கோழிக்கறி தின்கிறான் என்றால், ஒன்று அந்தக் கோழி நோய் வந்து செத்த கோழியாக இருக்கும் அல்லது அந்த ஏழைக்கு நோயாக இருக்கும்' என்ற புகழ்பெற்ற ரஷ்யப் பழமொழிதான்  நினைவுக்கு வருகிறது. ஏழைகள் இனி ஹோட்டல் என்ற வார்த்தையைக் காகிதத்தில் மட்டுமே எழுதிப் பார்க்க வேண்டியதுதான் போலிருக்கிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement