Ad Code

Responsive Advertisement

அரசர்களின் அரசர்! காமராஜர்


பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தினகரன் பத்திரிகையில் வெளியான கவிதை)



கடையெழு வள்ளல்கள்
வலம் வந்த
தமிழ் நாட்டில்
கல்வி வள்ளலாய்
அவதரித்த
கர்ம வீரரே!
காமராசரே!


அண்ணலின் சீடராய்
அயராது
பாடுபட்டீர்கள்!
அவர்தம் வழியில்
கதராடை உடுத்தி
மற்றதனை மறுத்தீர்கள்!

எளிமையின் சின்னமாய்
இறுதி வரை
வாழ்ந்தீர்கள்!

ஏழைக்கும்
கல்வி தந்து
ஏற்றம் அளித்தீர்கள்!

படிக்காத மேதை
நீங்கள்
பதினாலாயிரம்
பள்ளிகள் திறந்தீர்கள்!

வளம் பெறக் கல்வியும்
நலம் பெற உணவையும்
நன்றாகக் கொடுத்தீர்கள்!

வெளிநாட்டுப் பயணத்திலும்
வேட்டி சட்டையுடன்
வீறுநடை போட்டீர்கள்!
தென்கோடியில் பிறந்து
வடக்கேயும்
வெற்றிக்கொடி பிடித்தீர்கள்!

தமிழனின் புகழைத்
தனி ஆளாய்ச்
சுமந்தீர்கள்!

விண்ணளவு புகழ் கொண்டு
சென்னையில் ஓய்வெடுக்கும்
தன்னிகரில்லாத்
தலைவரே!

எங்களை மன்னியுங்கள்!

அன்று
தேர்தலில்
உங்களைத் தோற்கடித்தோம்!

இன்றும்
தோல்வியை
நாங்களல்லவா சுமக்கிறோம்!

கிளைகளை
வெட்டாமல்
வேரை அல்லவா
வெட்டியுள்ளோம்!

உங்களின் ஆட்சிதான்
இன்றும்
உரைகல் எங்களுக்கு!

வான் முட்டும்
உயரம்
உங்களுக்கு மட்டுமல்ல!

உங்கள் எளிமைக்கும்
நிலைத்த
புகழுக்கும்தான்!

புவிக்கோளம்
வாழும் வரை
பச்சைத் தமிழரே!

உங்கள்
புகழ் வாழும்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement