Ad Code

Responsive Advertisement

சர்வதேச தரத்தில் ஒரு அரசு பள்ளி... தலைமை ஆசிரியர் சொல்லும் சக்சஸ் ஃபார்முலா!

இது அரசு பள்ளிகளின் காலம்... அரசு பள்ளி ஆசிரியர்கள் உத்வேகம் அடைந்துவிட்டனர்... இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் ’மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி’. இந்த அசத்தல் தொடக்கப்பள்ளியுடன் போட்டிப்போட முடியாமல் தனியார் பள்ளியொன்று இழுத்து மூடப்பட்ட வரலாறும் உண்டு. 


தனியார் பள்ளிகளின் வாசலில் அட்மிஷனுக்காக பெற்றோர்கள் வரிசையில் நிற்கும் காட்சியைதான் சினிமாக்கள் இத்தனை நாள்களாக காட்சி வருகின்றன.  ஆனால் தமிழகத்தில் முதல்முறையாக அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்காக மக்கள் அலைமோதியது  மதுரை யானைமலை ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி முன்பாகதான். இதனை பற்றி விகடனில் கடந்த ஆண்டு கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது.


பாதுகாப்பான குடிநீர், சுத்தமான கழிப்பறை, கணினி மயமாக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை .. எப்படி இவை சாத்தியமானது...? ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.தென்னவன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்...

”மதுரை மாவட்டத்திலேயே ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிதான் அனைத்து  வசதிகளுடன் கூடியப் பெரிய தொடக்கப்பள்ளி. எங்கள் கிராமத்தை சுற்றி 8 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றை விடவும் எங்கள் பள்ளியில் தான் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கெல்லாம் காரணம் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்களின் கூட்டு முயற்சிதான். பெற்றோர்-ஆசிரியர்கள் குழுவை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் பள்ளியின் முன்னேற்றத்தை குறித்து கலந்தாலோசிப்போம். இப்படி ஒவ்வொரு அரசு பள்ளியிலும் குழு அமைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் பள்ளியில் உள்ள குறைகளை பற்றி விவாதித்தாலே பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். 



எங்கள் பள்ளியில் சுகாதாரத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி இவைதான்  ஒரு பள்ளியின் அடிப்படை தேவை. தமிழக அரசு அரசுப்பள்ளிகளுக்கென வகுத்த ஒவ்வொரு திட்டத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி கொண்டோம். பல அரசு பள்ளிகள், அரசு திட்டங்களையும் சலுகைகளையும் மாணவர்களுக்காக பயன்படுத்திக்கொள்வதே கிடையாது. அரசு பள்ளியின் நாற்காலி தொடங்கி கழிப்பறை வசதி வரை செய்துதர வேண்டியது அரசின் கடமை. அவற்றை திறம்பட பயன்படுத்தி கொள்ள வேண்டும்.


மாணவர்களுக்கு முழு நேரமும் படிப்பு மட்டுமே கற்பித்து கொண்டிருக்கமாட்டோம். கலை நிகழ்ச்சிகள், ஸ்கூல் பார்லிமெண்ட், லீடர்ஷிப் கேம்ப், கற்பனைத் திறன் பயிற்சிகள், போட்டோஷாப் பயிற்சி உள்ளிட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம். தொடக்கபள்ளி தான் என்றாலும் ஒரு பல்கலைக்கழக தரத்துக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். 

மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கற்பிக்க வேண்டும். இதுதான் எங்கள் ஃபார்முலா. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மனது வைத்தால் ஒவ்வொரு அரசு பள்ளியையும்  சர்வதேச தரத்துக்கு மாற்றம் முடியும். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளை தேடி வரும் மாணவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஆசிரியர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. அவர் கூறியது உண்மைதான். அரசு பள்ளிகளில் கல்விதரம் உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளி ஆசிரியர்களான எங்கள் மத்தியில் எழுந்துள்ள உத்வேகம்தான்” என்று முடித்தார் உற்சாகத்துடன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement