Ad Code

Responsive Advertisement

மாணவர்களின் சிகை அலங்கரிக்கும் அன்பு ஆசிரியை

"தொடர்ந்து கஷ்டங்களை மட்டுமே வாழ்க்கையில் சந்திச்ச வலிகளோடு இருந்தவள் நான். டீச்சரானப் பிறகு என் மாணவர்களின் புன்னகைதான், என்னோட எல்லாக் கஷ்டங்களுக்கும் மருந்தாக அமைஞ்சது. இவங்கதான் என் சொந்தங்கள். என் பிள்ளைகளாக, தம்பி - தங்கைகளாகப் பார்க்கிறேன்" எனச் சொல்லும்போதே ஆசிரியை மகாலட்சுமியின் குரல் நெகிழ்கிறது. 

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை. பள்ளி மாணவர்களுக்கு முடி வெட்டிவிடுவது, குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டிவிடுவது என கல்வியைத் தாண்டி, அவரது ஒவ்வொரு செயலிலும் தாயுள்ளம் பளிச்சிடுகிறது.


"2006-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கு வந்தேன். இங்கே மலைவாழ் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் அதிகம் படிக்கிறாங்க. படிப்பின் வாசனையே தெரியாதிருந்த மக்களுக்கு, இந்தக் குழந்தைகள் வழியேதான் கல்வியின் மணத்தை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பள்ளிக்கு வந்த புதுசுல, மாசக்கணக்கில் முடிவெட்டாமல், அழுக்கு உடைகளில் இருக்கும் மாணவர்களைப் பார்த்து திகைச்சுப்போனேன். 

'எல்லோரும் முடிவெட்டிகிட்டுதான் ஸ்கூலுக்கு வரணும்'னு கண்டிப்பா சொன்னேன். ஆனால், அடுத்த நாளிலிருந்து நிறையக் குழந்தைங்க ஸ்கூலுக்கு லீவுப் போட ஆரம்பிச்சுட்டாங்க. விசாரிச்சப்போதான், அவங்க முடிவெட்டிக்ககூட காசு இல்லாத நிலையில் இருக்கிறது தெரிஞ்சது. ரொம்பவே துடிச்சுப் போயிட்டேன். நம் குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம், கூச்சம் பார்த்தால் குழந்தைகளின் முகத்தில் புன்னகை மலராதுன்னு நானே முடிவெட்டிவிட ஆரம்பிச்சேன்'' என்று சொன்னதும், நமக்குள் கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறார் மகாலட்சுமி. 



''ஆரம்பத்தில் எனக்குத் தெரிஞ்ச மாதிரி வெட்டிவிடுவேன். ஹேர் ஸ்டைல் கோணலா இருக்கும். அதுக்கும் கூச்சப்பட்டுக்கிட்டு பசங்க லீவு போட்டுடுவாங்க. அதனால், ஒரு சலூன் கடைக்குப்போய் நாள் முழுக்க இருந்து முறையா முடிவெட்டக் கத்துகிட்டேன். அதுக்கு அப்புறம் 'டீச்சர், மறுபடியும் சொதப்பிடுவீங்களோன்னு பயந்தோம். ரொம்ப நல்லா வெட்டிவிட்டுட்டீங்க'னு பசங்க பாராட்டினதும் சந்தோஷப்பட்டேன். 

அப்போ ஆரம்பிச்சு அஞ்சு வருஷமா தினம் மூன்று மாணவர்களுக்கு முடிவெட்டிவிடறேன். ஆரம்பத்தில் ஒரு குழந்தைக்கு முடிவெட்ட அரை மணி நேரம் எடுத்துக்குவேன். இப்போ பத்தே நிமிஷத்துல வெட்டிவிடுற அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆகிட்டேன். நகம் வெட்டிவிடுறது, குளிப்பாட்டிவிடும் செயல்களையும் செய்யறேன். இதெல்லாம் அவங்களை இன்னும் நெருக்கமா உணரவைக்குது" என்கிற மகாலட்சுமி, மாணவர்களுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவதையும் வழக்கமாகச் செய்துவருகிறார். 



"பள்ளியில் மொத்தம் 300 மாணவர்கள் படிக்கிறாங்க. அதில் பத்து பேரைத் தவிர மத்தவங்க பள்ளியில் இருக்கும் விடுதியில் தங்கிப் படிக்கிறவங்க. பெற்றோரைப் பிரிஞ்சு விடுதியில் இருக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை. அவங்க உணர்வுகள் எப்படி இருக்கும்னு நினைச்சு வருத்தப்பட்டிருக்கேன். அதனால், அவங்களுக்கு நானே ஊட்டிவிட ஆரம்பிச்சேன். பள்ளி முடிஞ்சதும் மாலை நேரங்களில் அவங்களோடு சேர்ந்து விளையாடுவேன். 

மாணவர்கள் படிப்பு எந்த வகையிலயும் பாதிக்காத வகையில்தான் இந்த அன்பும் அரவணைப்பும் இருக்கும். 'நாம எதுக்குக் குளிக்கணும், சுத்தமா இருக்கணும், நோய் வராமல் இருக்க என்ன செய்யணும், பாடப் புத்தகம் தாண்டிய அறிவுசார்ந்த விஷயங்களை எப்படித் தெரிஞ்சுக்கணும்'னு பல விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பேன்'' என்று மகாலட்சுமி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மாணவர்கள் ஓடிவந்து அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். 


"பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக முகநூல் நண்பர்கள் வழியே கிடைக்கும் பணத்தில், இப்போ கூடுதலாக ஒரு நபரை நியமிச்சிருக்கிறோம். அவரும் என்னோடு சேர்ந்து இந்தக் குழந்தைகளுக்கு முடிவெட்டிவிடுகிறார். பல கிராமியக் கலைகள் வழியே பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறோம். அதனால், மாணவர்கள் மகிழ்ச்சியோடு படிக்க வராங்க. இவங்களோடு என் பையனும் இதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் நான்தான் முடிவெட்டிவிடுறேன்" என புன்னகைக்கிறார் மகாலட்சுமி. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement