Ad Code

Responsive Advertisement

பி.காம்., - பி.எஸ்சி., படிக்க கடும் போட்டி : கலை, அறிவியலுக்கு 6 லட்சம் பேர் முயற்சி

பிளஸ் 2வில், தேர்வானவர்கள் மத்தியில், இன்ஜி., மட்டுமின்றி, கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவில், அறிவியல் அல்லாத வணிகவியல், வரலாறு, தொழிற்கல்வி போன்ற பாடப்பிரிவுகளில், 3 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், குறைந்தபட்சம், 20 ஆயிரம் தொழிற்கல்வி மாணவர்கள், இன்ஜி., வேளாண் மற்றும் கால்நடை படிப்பில் சேருவர். 

அவர்களை தவிர, மற்ற அனைவரும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் தான் சேர வேண்டிய நிலை உள்ளது. அதேபோல், கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற, 5.94 லட்சம் பேரில், இன்ஜி., மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளில், அதிகபட்சம், மூன்று லட்சம் மாணவர்களே சேர முடியும்.அதனால், அவர்களில் மீதமுள்ள, மூன்று லட்சம் மாணவர்களையும், கலை, அறிவியல் பிரிவு மாணவர்களையும் சேர்த்து, ஆறு லட்சம் பேர் கலை, அறிவியல், கல்லுாரிகளில் சேர முயற்சிக்கின்றனர்.

ஆனால், தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் கல்லுாரிகளில், நான்கு லட்சம் இடங்களே உள்ளன. எனவே, மீதமுள்ள இரண்டு லட்சம் பேரில், ஒரு தரப்பினருக்கு, நிகர்நிலை பல்கலைகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், தனியார் கல்லுாரிகளிலும், இடங்களை பெற, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: இந்த ஆண்டு கணிதம், அறிவியல் இல்லாமல், கலை மற்றும் வணிகவியலில் மட்டுமே, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 1,000க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில், 40 ஆயிரம் பேர் வரை, பி.காம்., படிப்புக்கு போட்டியிட வாய்ப்புள்ளது. அதேபோல், இன்ஜி., படிப்புக்கு நிகராக, கலை, அறிவியல் படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும், 1,000க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், இன்ஜினியரிங்கில் கடினமாக படிக்க வேண்டும் என்பதால், பெரும்பாலும் கலை, அறிவியல் கல்லுாரிகளை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement