Ad Code

Responsive Advertisement

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாகச் செய்ய வேண்டிய 5 மாற்றங்கள் என்ன?

தமிழகக் கல்வித் துறையை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) விவகாரம் நடுத்தெருவில் நிறுத்திவிட்டிருக்கிறது.  98% மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்துவரும் ஒரு மாநிலத்தில், மத்தியப் பாடத்திட்டத்தின் அடிப்படையிலான இத்தேர்வு எவ்வளவு அப்பட்டமான திணிப்பு என்பதை எதிர்த்து எதிர்க்கட்சிகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

கல்வி பகிரங்கமாக மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து மத்திய அரசால் பறிக்கப்படுகிறது. மறுபக்கம், மாநிலத்தின் அதிகாரவசம் இருக்கும் கல்வியின் தரம் நாளுக்கு நாள் எவ்வளவு மோசமடைந்துவருகிறது என்பதற்கு, நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் ஒரு சாட்சியமாக நிற்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் விவரம் இது: 2014-15-ல் 37 பேர். 2015-16-ல் 24 பேர். மருத்துவக் கல்விக்குத் தேர்வாகும் 95% மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள்.

ஆட்சியாளர்களே கல்வி வியாபாரிகளாகவும் தரகர்களாகவும் மாறியிருக்கும் நாட்டில், மத்திய அரசு, மாநில அரசு இரண்டோடும் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கல்வித் துறையில் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானால் மட்டுமே அதிகாரப் பறிப்பில் ஈடுபட்டிருக்கும் மத்திய அரசை இனி தமிழக அரசு தார்மிகரீதியாக எதிர்கொள்ள முடியும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆளும் அதிமுகவுக்குள் நடக்கும் அதிகாரச் சண்டை அரசின் பெரும்பாலான துறைகளை முடக்கியிருக்கும் நிலையில், விதிவிலக்காகப் பள்ளிக்கல்வித் துறையில் சலனங்கள் தெரிகின்றன. ஒரு பெரிய மாற்றத்துக்கான நீண்ட காலச் செயல்திட்டத்துடன் களமிறங்க வேண்டிய தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய ஐந்து சீர்திருத்தங்கள் என்னென்ன?

1.காலை உணவுத் திட்டத்தை அமலாக்குங்கள்!

உலகிலேயே அதிகமான ஊட்டக்குறைபாடு கொண்டவர்களைக்கொண்ட நாடு இது. ஒவ்வொரு ஆண்டும் ஊட்டக்குறைவு காரணமாகவே 13 லட்சம் குழந்தைகளைப் பறிகொடுக்கிறோம். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய புரட்சிகரமான மாநிலம் என்றாலும், ஊட்டக்குறைபாடு இன்னும் தமிழக மாணவர்களை முழுக்க விட்டுவிடவில்லை. 23% மாணவர்கள் இங்கு ஊட்டக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது தேசியக் குடும்ப நல ஆய்வறிக்கை. உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்.

தமிழக மாணவர்கள் இன்று இரு பிரிவினர்களாக உருவெடுத்துவருகிறார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் பெருமளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவில் எடைக்குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் கொண்டுவந்து, சிறுதானியக் கஞ்சியை உணவாக வழங்கினால் உணவுக் கலாச்சாரத்தில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தைத் தமிழகத்தில் கொண்டுவர முடியும். ஆரோக்கியமான இளைய தலைமுறையை வளர்த்தெடுப்பதுடன் மறைமுகமாக விவசாயத்திலும் நம்முடைய பாரம்பரிய பயிர் சாகுபடிக்குப் புத்துணர்வூட்ட இது உதவும். பருப்பு 15 கிராம், மளிகைக்கு 36 பைசா, காய்கறிக்கு 80 பைசா என்ற ஒதுக்கீட்டில் நாம் பரிமாறும் மதிய உணவைச் சத்துணவு என்று பெயரிட்டு அழைப்பது உண்மையில் ஒரு குரூரமுரண். அது எந்த வகையிலும் நம் பிள்ளைகளுக்குப் போதுமானது அல்ல.

திருச்சி சுற்றுவட்டராத்தில் பல பள்ளிகளில் ‘மக்கள் அரசு கூட்டுப்பங்கேற்பு முறை’யில் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார்கள். கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளி இத்திட்டத்தில் ஒரு முன்னோடி. பள்ளியிலிருந்து ஓய்வுபெறும் ஆசிரியர்கள் தந்து செல்லும் நன்கொடை வாயிலாகவே திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே ஆர்வம் காட்டிய திட்டம் இது. ஜெயலலிதா இம்முறை தேர்தல் அறிக்கையிலேயே இத்திட்டத்தைக் கொண்டுவருவதை ஒரு வாக்குறுதியாக அளித்திருந்தார். சமூகப் பொருளாதாரத் துறையில் எவ்வளவோ முன்னேறியிருக்கும் தமிழகம் தம் பிள்ளைகளில் கணிசமான ஒரு பகுதியினரை இன்னும் பசியிலும் ஊட்டக்குறைபாட்டிலும் விட்டுவைத்திருப்பது சமூகக் குற்றம். முதலில், நம் மாணவர்களை ஆரோக்கியமானவர்களாக உருமாற்ற வேண்டும். அது நல்ல கல்விக்கும் அவர்களை இட்டுச் செல்லும். அதற்கு இத்திட்டம் பெரிய அளவில் உதவும்.

2. பாடத்திட்டத்தைத் தரம் உயர்த்துங்கள்!

தமிழகப் பாடத்திட்டம் பல வகைகளில் இன்று காலத்தே கீழே பின்தங்கி நிற்கிறது. அறிவியல், கணிதப் பாடங்களை மத்தியக் கல்வி வாரியப் பாடங்களிலிருந்தும் கேரளம் போன்ற கல்வித் துறையில் முன்னணியில் நிற்கும் ஏனைய மாநிலங்களிடமிருந்தும் நமக்கேற்ற வழியில் சுவீகரித்துக்கொள்வது ஒரு மாற்றாக இருக்கும். அதேபோல, ‘கான் அகாடமி’யின் பாடத்திட்டம் இன்று சர்வதேச அளவில் மேம்பட்ட ஒன்றாகக் கல்வியாளர்கள் பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது. நமக்கேற்ற வழியில் அதையும் சுவீகரிப்பது தொடர்பில் பரிசீலிக்கலாம். கூடவே நீண்ட கால நோக்கில், இவற்றுக்கெல்லாம் சவால் விடத்தக்க வகையில் நமக்கென புதிய பாடத்திட்டத்தைப் பிரத்யேகமாக உருவாக்கும் ஆய்வுக் குழுக்களையும் உருவாக்க வேண்டும். அந்தக் குழுக்கள் கல்வித் துறைக்கு வெளியிலிருந்தும் பங்களிப்புகளைப் பெறத்தக்க வகையிலான சுதந்திரத்தன்மையோடு உருவாக்கப்பட வேண்டும்.

3. கல்வியை அரசியல்மயப்படுத்துங்கள்!

சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் மிகப் பெரிய அறிவுசார் பிரச்சினை என்றுகூட இதைச் சொல்லலாம். அரசியலற்றத்தன்மை. இன்று நம்முடைய கல்வி நிலையங்கள் முற்றிலுமாக அரசியல் நீக்கப்பட்டவையாக மாறிவிட்டன. முக்கியமாக, பாடத்திட்டமே அப்படிதான் வடிவமைக்கப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ளத்தக்க ஒரு வரலாறு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப் போராட்டம். இந்தியாவில் இன்று ஆங்கிலம் எனும் மொழி நீடித்திருக்கவும், உலகமயமாக்கல் சூழலில் ஆங்கிலத்தின் துணை கொண்டு பல நாடுகளுக்குச் சவால் விடத்தக்க வகையில் இந்தியா முன்னேறவும் முக்கியமான வரலாற்றுக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது அது. மாணவர்கள் முன்னின்று நடத்திய போராட்டம். ஆனால், இன்றைய மாணவர்களில் பெரும் பகுதியினருக்கு அதுகுறித்துகூட எதுவும் தெரிவதில்லை.

அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவந்த வேகத்தோடு வகுப்புவாரி இடஒதுக்கீடு ஒழித்துக்கட்டப்பட்டபோது, கடும் எதிர்ப்பால் அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டுவரக் காரணமாக இருந்தது தமிழகம். இன்று இந்தியாவில் பல்வேறு சமூகங்களும் இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றன என்றால், அதற்கு முன்னோடி தமிழகத்தின் சமூகநீதிக் கொள்கை. ஆனால், யார் இந்த இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மேலே வந்தார்களோ அவர்களே இன்று அதற்கெதிராகப் பேசுவதில் முன்னிற்கின்றனர். 69% இடஒதுக்கீட்டில், 19% மட்டுமே தலித்துகள், பழங்குடிகளுக்கானது; எஞ்சிய 50% அதைப் பெருமளவில் குறைகூறும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது என்கிற அடிப்படைத் தகவல்கூடப் பல பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கே தெரியவில்லை.

இத்தனைக்கும் இரண்டும் திராவிட இயக்கத்தின் முக்கியமான சாதனைகள். இந்தக் கோளாறுகளுக்கான காரணம் என்ன? அரை நூற்றாண்டாக அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த இரு திராவிடக் கட்சிகளுமே இந்நிலையை உருவாக்கியதற்காக வெட்கப்பட வேண்டும். கல்விக்கூடங்களைக் காவி மயமாக்குவதுபோலக் கட்சி சாயமேற்றுவது வேறு; ஜனநாயக விழுமியங்களையும் உண்மையான வரலாற்றையும் சொல்லிக்கொடுப்பது வேறு. காந்தி, நேரு, அம்பேத்கர் தொடங்கி பெரியார், காமராஜர், அண்ணா வரை ஒவ்வொருவரும் இந்நாட்டின் பன்மைத்துவத்திற்கும் எப்படியான தியாகங்களைப் பங்களித்திருக்கின்றனர் என்பது சொல்லப்பட வேண்டும். இனி, ‘காந்தி கொல்லப்பட்டார்’ என்றல்ல; ‘காந்தி ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டார்’ என்று சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் வரலாறும், தமிழர்களின் சாதனையும் சொல்லப்பட வேண்டும். அதிகாரத்தின் மொழியாக தமிழ் மாற வேண்டும் என்றால், நாம் அதிகாரத்தை நோக்கிச் செல்பவர்களாக மாற வேண்டும் எனும் செய்தி கடத்தப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் வரலாற்றுப் பாடத்திட்டம் மாற்றப்படுவதுடன் ஆசிரியர்களுக்கு இது தொடர்பில் விரிவான பயிலரங்குகள் முதலில் நடத்தப்பட வேண்டும்.

4. ஆங்கிலத்தை எளிமையாக்குங்கள்!

சினிமாவில் காலடி எடுத்துவைக்கும் வரை ஆங்கிலம் தெரியாத ஒரு பெண்ணை, நடிகையான அடுத்த ஆறே மாதங்களில் ஆங்கிலம் பேசவைப்பது எந்த வகையான பயிற்சியின் வழியாகச் சாத்தியமாகிறது? நாள்தோறும் ஒரு வகுப்பு என்று பள்ளியில் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆங்கிலத்தைச் சொல்லிக்கொடுத்தும் ஏன் நம் குழந்தைகளில் பெரும்பாலானோரை ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதவைக்கக்கூட முடியாமல் போகிறது?

ஆங்கிலம் பயிற்றுவிக்கும் முறையை முற்றிலுமாக மாற்ற வேண்டும்! உலகெங்கும் ஆங்கிலத்தை எடுத்துச் செல்லும் ‘பிரிட்டிஷ் கவுன்சில்’ போன்ற அமைப்புகளுடன் கலந்தாலோசித்தால், குறுகிய காலத்தில் ஆங்கிலத்தை எளிமையாகக் கற்றுக்கொடுக்கும் கலையை நாம் கண்டறியலாம். பிள்ளைகளின் வயதுக்கேற்ற, அவர்கள் திறனுக்கேற்ற வார்த்தை வரையறைக்குள் சுவாரஸ்யமான புத்தகங்களை உருவாக்க ‘ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்’, ‘கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்’ போன்ற நிறுவனங்களின் உதவியை நாடலாம். ஆங்கிலத்துக்கு என்று பிரத்யேகமாக, தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டியதில்லை; பல பள்ளிகளுக்குச் சுழற்சி முறையில் செல்பவர்களாகவும் இருக்கலாம். வெளியில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றுவோரைத் தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக்கொள்ளவும் திட்டமிடலாம்.

5. தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும்!

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டம் வாங்கிவிடலாம் எனும் அவலச் சூழலுக்கு முடிவு கட்ட வேண்டும். கேரள அரசு சமீபத்தில் இதற்கான முன்னுதாரணச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன்படி, கேரளத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை இனி மலையாளப் பாடம் கட்டாயம். அது எந்தக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளியாக இருந்தாலும் சரி, “மலையாளம் சொல்லித் தராத பள்ளிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும்’’ என்று சொல்லிவிட்டார் முதல்வர் பினரயி விஜயன். மேலும், “பள்ளிகளில் மலையாளத்தில் பேசுவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தப் பள்ளி நிர்வாகமும் தடை விதிக்கக் கூடாது’’ என்பதையும் இந்தச் சட்டம் உறுதிசெய்கிறது. “நாடெங்கிலும் மத்தியக் கல்வி வாரியப் பள்ளிகளில் இனி இந்தி கட்டாயம்’’ என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தாய்மொழியைக் காக்க தமிழகத்திலும் தமிழைக் கட்டாயமாக்கும் சட்டம் அவசியம்.

தமிழ் மொழி பயிற்றுவிப்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பாடத்திட்டம் உச்சபட்ச படைப்பூக்கத்தை வெளிப்படுத்துவதாக மாற்றப்பட வேண்டும். ‘தமிழில் முடியும்; தமிழால் முடியும்’ எனும் தன்னம்பிக்கையை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதாக அது உருவாக்கப்பட வேண்டும்.

கல்வித் துறை மாற்றங்கள் அடிப்படையில் ஒரு தொடர் பயணம். மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை நீண்ட பயணத்துக்குத் தயாராகி எழுந்து நிற்க பிராண வாயு சிகிச்சையாக இந்நடவடிக்கைகள் அமையும்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement