Ad Code

Responsive Advertisement

'NEET' பாடத்திட்டம் தெரியாமல் திணறல் : மவுனம் கலைக்குமா கல்வித்துறை!

மாநில பாடத்திட்ட புத்தகங்களை மட்டும் நம்பி, 'நீட்' தேர்வுக்கு தயாராகும், தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்கள், தேர்ச்சி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

'நீட்' எனும், மருத்துவ படிப்பு களுக்கான தேசிய நுழைவுத் தேர்வு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட, ஏழு மாவட்டங்களில், மே 7ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, 11.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இத்தேர்வு நடப்பாண்டில், ஆங்கிலம், இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட, எட்டு மாநில மொழிகளில் எழுதலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்.சி.இ.ஆர்.டி., என்ற தேசிய கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடத்திட்ட அடிப்படையில், நீட் தேர்வில், வினாக்கள் இடம்பெறும். இப்புத்தகங்கள், ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே கிடைக்கின்றன. இணையதளத்திலும், இப்புத்தகங்களின் மொழிபெயர்ப்பு பிரதி கிடைக்கவில்லை. இதனால், தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில், மேல்நிலை வகுப்புகளுக்கு, 15 ஆண்டுகளுக்கும் முன், பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. 2005ல், சில முக்கிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கடின பகுதிகள் எடுக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்துடன், மாநில பாடத்திட்டத்தை ஒப்பிட்டால், 60 சதவீத அளவுக்கு மட்டுமே, இணையாக இருக்கும்.

எனவே, பள்ளிக் கல்வித் துறை சார்பில், நீட் தேர்வுக்கு, பிரத்யேக சிறப்பு கையேடு, இணையதளத்தில் வெளியிட்டால், தமிழ் வழி மாணவர்கள் பலனடைவர்.இவ்வாறு அவர் கூறினார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement