Ad Code

Responsive Advertisement

இயற்கை விவசாயம், தங்கம் பரிசு, ஃபேஸ்புக் நிதியுதவி..! அசத்தும் திருநெல்வேலி அரசுப்பள்ளி

கடையநல்லூர் அரசுப் பள்ளி

அரசுப்பள்ளி மாணவர்கள் திறமைசாளிகளாக இருந்தாலும், அதனைக் கண்டறிந்து வெளிக்கொண்டுவருவதிலும் ஊக்கப்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. இதைச் சரியாக உணர்ந்து, தனியார் பள்ளிக்கு இணையாக, தான் பணியாற்றும் பள்ளியை மாற்றி இருக்கிறார் ஓர் ஆசிரியர்.

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர், பழனிகுமார். திறமையான மாணவர்களைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் தங்க நாணயம் வழங்குவது, இயற்கை விவசாயம் மூலம் சத்தான காய்கறிகளை விளைவிக்க மாணவர்களையே பங்கேற்ற செய்வது, தனியார் பள்ளி போன்ற சீருடைகள், யோகா, நடனப்பயிற்சி என நல் உள்ளங்கள் பலரிடமும் இருந்து பெற்ற நிதியின் மூலம் மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறார் பழனிகுமார். 
அரசுப் பள்ளி மாணவர்கள்
"நான் 2008-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக வந்தேன். நான்கு வருடங்கள் ஐந்தாம் வகுப்புக்கும், பிறகு நான்காம் வகுப்புப் பிள்ளைகளுக்கும் ஆசிரியரா இருக்கேன். நான் ஆசிரியராகச் சேர்ந்த சமயத்தில் இவர்களின் திறமைகளைப் பார்த்து வியந்தேன். இந்தத் திறமைகள் வெளியுலகத்துக்குத் தெரியணும்னு ஆசைப்பட்டேன். என்னாலான ஆசிரியர் பழனிகுமார்முயற்சிகளை சின்னச் சின்னதாக செய்ய ஆரம்பிச்சேன். பள்ளியின் பெயரில் ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிச்சு, குழந்தைகளின் சாதனைகளை போஸ்ட் பண்ணினேன். குறிப்பாக, குழந்தைகளே தங்களைப் பற்றி பேசும், எழுதும் விஷயங்களை போஸ்ட் செஞ்சேன். அதைப் பார்த்துட்டு பலரும் பாராட்டினாங்க. சின்ன அளவில் தொடங்கி இப்போ பெரிய அளவுக்கு நிதியுதவி செய்துட்டு இருக்காங்க. அந்த நிதியுதவி மூலம் பள்ளியின் வடிவமைப்பை மாற்ற ஆரம்பிச்சேன். 
வகுப்பறைகள், சுற்றுச்சுவர்களில் பிரத்யேகமாக ஓவியங்களை வரைந்தோம். பல்வேறு துறைகளிலும் சாதனைப் படைத்தவர்களும், அவர்களுக்கு அருகில் ஒரு காலி இடமும் இருக்கும். 'இந்தக் காலி இடத்தில் வலம்வரப்போவது, உங்களில் யார்?' என எழுதி இருக்கும். இந்த ஓவியங்களைப் பார்க்கும் குழந்தைகளுக்கு நாமும் பெரிய சாதனையாளரா ஆகணும் என்கிற உத்வேகம் வரும். ஒவ்வொரு வகுப்பறையும் உயிரோட்டமாவும் இருக்கும். பவர்பாயிண்ட் பயிற்சி வகுப்புகள், ஸ்மார்ட் கிளாஸ் எனப் பல வகைகளில் பாடம் சொல்லிக்கொடுக்கிறோம்'' என்று பள்ளியில் தான் மாற்றியிருக்கும் விஷயங்களின் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்கிறார் பழனிகுமார். 
பள்ளிக்கு அருகில் உள்ள மார்க்கெட்டில் இருந்து காய்கறி கழிவுகளைச் சேகரித்து வந்து இயற்கை உரம் தயாரித்து, பள்ளியில் இருக்கும் இயற்கை காய்கறித் தோட்டத்துக்குப் பயன்படுத்துகிறார். இதற்காக, சொட்டுநீர் பாசன முறையையும் கடைப்பிடிக்கிறார். விளையும் காய்கறிகளை பள்ளியில் தயாராகும் சத்துணவுக்குப் பயன்படுத்துகிறார்கள். சில சமயம் மார்கெட்டுக்கு எடுத்துச்சென்று குழந்தைகளையே விற்பனை செய்யவும் பயிற்சி அளிக்கிறார். இதன் மூலம், விவசாயிகளின் உணர்வு, ஆரோக்கியமான இயற்கை உணவுகளைப் பற்றி குழந்தைகள் முழுமையா தெரிந்துகொள்கிறார்கள். 
அரசுப் பள்ளியில் ஓவியம்
''தொலைவில் இருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்காக வேன் வசதி செய்திருக்கிறேன். யோகா மாஸ்டர் ஒருவர் மூலம் வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு யோகா பயிற்சிஅரசுப் பள்ளியில் விவசாயம் கொடுக்கிறோம். நாங்களே தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு யோகா சொல்லிக்கொடுக்கிறோம். நாட்டுப்புற விளையாட்டுகளையும் சொல்லிக்கொடுக்கிறோம். அரசு மருத்துவமனை, அரசு அலுவலகம், வங்கி, தபால் நிலையம் போன்ற இடங்களுக்குக் குழந்தைகளை நேரில் அழைத்துச் சென்று களச் சூழலைப் பாடமா நடத்துகிறோம். தனியார் பள்ளி மாணவர்களைப் போல, எங்கள் பள்ளியில் படிக்கும் 260 குழந்தைகளுக்கும் ஸ்பான்ஸர் மூலமாக இரண்டு செட் வெரைட்டி யூனிஃபார்ம் வாங்கிக்கொடுத்திருக்கிறோம்" என்கிற பழனிகுமார், தங்க நாணயப் பரிசு பற்றி கூறுகிறார். 
"2010-ம் வருடத்தின் கல்வி இறுதியாண்டு சமயத்தில், பள்ளியின் எல்லாக் குழந்தைகளுக்கும் ஆங்கில மொழிக்கான சிறப்பு தேர்வு நடத்தினோம். அரை கிராம் தங்க நாணயம், அஞ்சு லிட்டர் குக்கர், மூணு லிட்டர் குக்கர், பால் குக்கர் என முதல் நான்கு மாணவர்களுக்கு பரிசுகளைக் கொடுத்தேன். அடுத்த வருடம் முதல், ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் முதல் பரிசு வாங்கும் குழந்தைக்கு மட்டும் அரை கிராம் தங்க நாணயத்தை என் செலவில் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறேன். இந்த வருஷம் நான்கு ஸ்பான்ஸர்கள் மூலம் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையும் தலா ஒரு மாணவருக்குத் தங்க நாணயம் கொடுத்து ஊக்கப்படுத்தினோம். நேரிலும், பள்ளியின் பெயரில் இருக்கும் 'Thirunavukkarasu PS' என்ற பெயரில் இயங்கும் ஃபேஸ்புக் வாயிலாகவும் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கிடைத்துக்கொண்டு இருக்கு. இதுவரை மூணு லட்சம் நிதியுதவி வந்திருக்கு. இந்தப் பணத்தின் மூலம் பள்ளியில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறோம். இதனால், குழந்தைகளின் கல்வித் தரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு இருக்கு. பெற்றோர்களும் மகிழ்ச்சி. இதற்கெல்லாம் உதவியாக இருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். எங்கள் பள்ளியை தனியார் பள்ளியைவிட பெரிய நிலைக்குக் கொண்டுவருவோம்'' என்கிற பழனிகுமாரின் நம்பிக்கை வார்த்தைகளுக்குத் தோள் கொடுப்பது போல மாணவர்கள் உற்சாகமாகக் குரல் கொடுக்கிறார்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement