Ad Code

Responsive Advertisement

ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்னணு குடும்ப அட்டை: ஜூன் மாதம் வரை அவகாசம்

தமிழகத்தில் குடும்ப அட்டையுடன் ('ரேஷன் கார்டு') ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்னணு குடும்ப அட்டை: தமிழகத்தில் வழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைக்குப் பதிலாக, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்துக்குள் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கான பணியில் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

2.77 லட்சம் பேர்: இந்த நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 1.87 கோடி குடும்ப அட்டைதாரர்களில், 2.77 லட்சம் பேர் இதுவரை தங்களது ஆதார் எண் விவரத்தை குடும்ப அட்டையுடன் இணைக்கவில்லை. இவர்களுக்கு வரும் ஜூன் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு எப்படி? 'ஸ்மார்ட் செல்லிடப்பேசி' வைத்திருப்போர், TNePDS என்ற செல்லிடப்பேசி செயலியை ('மொபைல் ஆப்') பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்தச் செயலி மூலம் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

இணையதளம் மூலமும்.. செயலி பதிவிறக்கம் செய்யும் வசதி இல்லாதோர், உணவுப் பொருள் வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.
திருத்தத்துக்கான வேண்டுகோளை குடும்ப அட்டைதாரர் இணையத்தில் பதிவு செய்தவுடன், அட்டைதாரரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு ரகசியக் குறியீட்டெண் ('ஓடிபி') குறுஞ்செய்தியாக (எஸ்எம்எஸ்) வரும். அந்த எண்ணை இணையதளத்தில் பதிவு செய்து, ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றை குடும்ப அட்டைதாரர்கள் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்யும்போது உரிய ஆதார ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வது அவசியம்.
மின்னணு குடும்ப அட்டை கிடைக்கும் வரை...ஆதார் எண் இணைப்பு செய்து புதிய மின்னணு குடும்ப அட்டைக்காக காத்திருப்போர், குடும்ப அட்டையுடன் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதோர் என அனைவருக்கும் பழைய குடும்ப அட்டைக்கு தொடர்ந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்னென்ன விவரங்கள்!
நவீன மின்னணு குடும்ப அட்டையின் முன்புறம் குடும்பத் தலைவரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, முகவரி, அட்டையின் கோடு நம்பர், அட்டை வகை ஆகியவை இடம்பெற்றிருக்கும். அதேபோல், அட்டையின் பின்புறத்தில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், நியாய விலைக் கடையின் விவரம் மற்றும் கோடு நம்பர் ஆகிய விவரங்கள் இருக்கும்.

மின்னணு குடும்ப அட்டையில் உள்ள கோடு எண், ரேஷன் கடையில் உள்ள 'பாயின்ட் ஆஃப் சேல்' கருவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு பில் போடப்படும். அதன் பின்னரே பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement