Ad Code

Responsive Advertisement

ஆங்கிலம் தெரியாத அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை சரிவதாக புகார் - DINAMALAR

தொடக்கப் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், மாணவர் சேர்க்கை கடும் சரிவை சந்தித்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 37 ஆயிரம் உள்ளன. இவற்றில், 38 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 

பல பள்ளிகளில், 20க்கும் குறைவாகவே மாணவர்கள் படிப்பதால், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரட்டை அடிக்கும் நிலை உள்ளது.

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி ஆசிரியர்கள், சொந்த விஷயங்களுக்கு நேரத்தை செலவழிப்பதாக புகார் உள்ளது. இதை கட்டுப்படுத்த, பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' வருகை பதிவு முறையை, உடனடியாக அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பலருக்கு ஆங்கிலம் தெரியாததால், மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பணி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையும் கடுமையாக சரிந்துள்ளது. 

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் மோசஸ் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தி, ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், அதற்கென ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 

தமிழ் வழி ஆசிரியர்களே, ஆங்கில வழி மாணவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். அதனால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். 
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாததால், அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் என, இருவழி தொடக்க வகுப்புகளுக்கும், குறைந்தபட்சம், 20 மாணவர்களை சேர்ப்பதே, கஷ்டமாக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.இன்றைய நிலையில், நகர்ப்புறங்களில், எல்.கே.ஜி., குழந்தைகளே ஆங்கிலம் பேசும் நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாதது, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. 
எனவே, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில், ஆங்கில சிறப்பு வகுப்பு எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement