Ad Code

Responsive Advertisement

பள்ளி இறுதிநாளில் அரசுப் பள்ளியின் நெகிழ்ச்சி தருணங்கள்!

அரசுப் பள்ளி
ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத பள்ளி நாள் என்னவென்று கேட்டால், அநேகர் சொல்லும் பதில்... ஒவ்வோர் ஆண்டின்  பள்ளியின் கடைசி நாள் தான் என்று சொல்வார்கள். தேர்வுகள் முடிந்து மாதக்கணக்கில் விடுமுறை தொடங்கப்போகிறதே என்கிற மகிழ்ச்சியும் நண்பர்களைப் பிரியப் போகிறோமே என்கிற கவலையும் ஒருசேர இணைந்திருக்கும் நாள். ஆனாலும் அன்றைய தினத்தை மகிழ்ச்சியோடுதான் கொண்டாடியிருப்பீர்கள். அந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்தே வருகிறது. அதுவும் அரசுப் பள்ளிகளில் இப்போது ஆசிரியர்களும் மாணவர்களோடு இணைந்து பள்ளியின் கடைசி வேலைநாளை கொண்டாடி வருகிறார்கள். இது மாணவர் - ஆசிரியர் இருவர்களுக்கிடையே நல்ல புரிதலைக் கொடுக்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதுபோன்ற பள்ளிகளில் நடந்த சில நெகிழ்ச்சித் தருணங்களின் தொகுப்பு:

அரசுப் பள்ளி

* ஊ.ஒ.ந.நி.பள்ளி, பாப்பாபட்டி, கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
மாணவர்களுக்கு மகிழ்ச்சி என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். ஆனால் பள்ளி நாட்களில் அது வாய்ப்பில்லையே. அதனால் பள்ளியின் இறுதி நாளில் அதற்கு தடைச் சொல்லாமல் சந்தோஷமாக ஆடிப் பாடி அந்த நாளை கொண்டாடியிருக்கிறார்கள்.
அரசுப் பள்ளி
* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோனேரிகுப்பம், விழுப்புரம் மாவட்டம்.
ஜிகினா திருவிழா
ஆசிரியர் பள்ளிக்குள் நுழைந்ததுமே முக்கியமான விஷயம் சார் என்று வகுப்புக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரும் ஏதோ பிரச்னையோ என்று நினைத்து வந்திருக்கிறார். ஆனால், வகுப்புக்குள் நுழைந்ததுமே அங்கு தயாராக இருந்த திவாகர் எனும் மாணவர் வாசலில் கட்டியிருந்த பலூனை வெடிக்கச் செய்தான். அதனுள் இருந்த ஜிகினா ஆசிரியரின் தலை, சட்டையெல்லாம் ஒட்டிக்கொண்டது. இன்னொரு பலூனை வெடிக்கச் செய்து மற்ற மாணவர்களின் மேல் பூச, எல்லோரும் ஜிகினாவின் பளபளப்பில் மகிழ்ச்சியோடு மின்னினார்கள்.
அரசுப் பள்ளி
*சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை.
ஒளியேற்றும் விழா!
இந்தப் பள்ளியில் வித்தியாசமான பழக்கம் ஒன்றை பள்ளியின் கடைசி நாளன்று கடைபிடிக்கிறார்கள். நடுநிலைப்பள்ளி என்பதால் 8-ம் வகுப்பு மாணவர்கள் அந்தப் பள்ளியை விட்டு விடைபெறுவார்கள் அல்லவா... அதனால், அடுத்த வரும் 8-ம் வகுப்புக்குள் நுழையும் மாணவர்களிடம் ஏற்றப்பட்ட மெழுகு வர்த்தியைக் கொடுப்பார்கள். இதனை ஒளியேற்றுதல் எனும் தலைப்பில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறார்கள்.
அரசுப் பள்ளி

 * ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, துளுவபுஷ்பகிரி, திருவண்ணாமலை.
கேக் எடு கொண்டாடு!
பிறந்த நாளைப் போல சூப்பரான கேக் வாங்கி வந்து, அனைத்து மாணவர்களும் பாட்டுப்பாடிகேக் வெட்டியிருக்கிறார்கள். எல்லோருக்கும் கேக் கிடைத்ததும் மாணவர்களின் உற்சாகக் குரல் பள்ளியை அதிர வைத்தது.
அரசுப் பள்ளி
* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பேரணம்பட்டு பகுதி.
எழுத்தாளருடன் செல்ஃபி
தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் அழகிய பெரியவன். அவர் ஆசிரியராக பணியாற்றி வருபவர். இந்த ஆண்டின் பள்ளி இறுதி நாளில் மாணவர்கள் விடைபெறுகையில் நீண்ட நேரம் ஆலோசனைகள் வழங்கினார். மாணவர்களின் அன்பையும் ஆர்வத்தையும் கண்டு நெகிழ்ந்து அந்தக் கணத்தைப் பத்திரப் படுத்திக்கொள்ள எல்லோரும் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குடியாத்தம், வேலூர் மாவட்டம்.
சின்னச் சின்னப் பரிசுகள்!
8-ம் வகுப்பு மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பை முடித்து வேறு பள்ளிக்குச் செல்லவிருக்கிறார்கள். அவர்கள் செய்த ஒரு விஷயம் ஆசிரியர்கள் உள்பட பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. 8-ம் வகுப்பு மாணவர்கள் ஒன்றிணைந்து பணம் சேகரித்து, அந்தப் பள்ளியில்  ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வாங்கித் தந்திருக்கின்றனர். ஆசிரியர் கோபிநாத் வேஷம் போட்டு, நாடகம் நடித்து மாணவர்களை உற்சாகப்படுத்துபவர். அதனால் மாணவர்கள் வண்ணப் பொடி, ஜிகினா தூவி பள்ளியின் இறுதிநாளை கொண்டாடியிருக்கிறார்கள்.
அரசுப் பள்ளி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நல்லம்பாக்கம், வண்டலூர்.
எதிர்பாராத பரிசு!
பள்ளியின் இறுதி வேலை நாளன்று வகுப்புக்குள் நுழைந்த கிருஷ்ணவேணியின் ஆசிரியரை நெகிழச் செய்யும் காட்சி ஒன்று இருந்தது. கரும்பலகையில் இரண்டு மாணவிகள் " I Love My Teache" என ஆசிரியர் வருவதைக்கூட உணராமல் எழுதிகொண்டிருந்தனர். அவர்கள் மட்டுமல்ல மேடம், நாங்களும்தான் என வகுப்பின் பிற மாணவர்களும் சொல்லியிருக்கின்றனர். உணர்ச்சியின் தருணத்தை நினைவில் நிறுத்தும் விதத்தில் எல்லோரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அரசுப் பள்ளி

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement