Ad Code

Responsive Advertisement

அன்பாசிரியர் 36: அன்னபூர்ணா- வகுப்பறையை மேம்படுத்த நகைகளை அடகு வைத்த ஆசிரியை!

கடைசி வரை கற்றுக்கொண்டே இருப்பவர் - ஆசிரியர்




'மாணவர்களுக்காக என் நகைகளை அடகு வைத்து, ரூ.1.75 லட்சம் செலவில் வகுப்பறையை மேம்படுத்தியது பெரிதில்லை. அவர்களுக்கு உயர்தர ஆங்கிலம் கற்பித்து தன்னம்பிக்கை மிக்க மாணவர்களாய் மாற்றுவதையே பெருமையாய் நினைக்கிறேன்' என்கிறார் இந்த அத்தியாய அன்பாசிரியர் அன்னபூர்ணா.

''விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கந்தாடு அரசு தொடக்கப்பள்ளியில் முதல் பணி கிடைத்தது. அங்கே ஒழுங்காய்த் தலை வாராமல், மூக்கொழுக, அழுது கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பணியை விட்டுவிடலாம் என்று நினைத்து, பகுதி நேரத்தில் பிசிஏ மற்றும் எம்பிஏ முடித்தேன். அந்த 5 வருடங்களில் மாணவர்கள் என்னை நெருங்கி வந்தாலும், நான் ஒதுங்கிப் போனேன். மெல்ல மெல்ல எனக்கும் அவர்களைப் பிடிக்க ஆரம்பித்தது.

ஆசிரியராகவே தொடர முடிவு செய்து, முதுகலை ஆங்கிலம் முடித்தேன். மாணவர்களுக்கு ஏபிசிடியை மட்டுமே சொல்லிக் கொடுப்பது ஒரு கட்டத்தில் போரடித்தது. நான் படித்த ஆங்கிலமும் மறக்க ஆரம்பித்தது. அதனால் பள்ளியில் ஆங்கிலத்தில் உரையாட முடிவு செய்தேன். காலை முதல் மாலை வரை மாணவர்களுடன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினேன்.

ஆரம்பத்தில் தயங்கிய மாணவர்கள், சிறிது நாட்களில் தடுமாறியவாறு பேசத் தொடங்கினர். நாட்கள் செல்லச்செல்ல தன்னம்பிக்கையுடன் சரியான உச்சரிப்போடு பேச ஆரம்பித்தனர். ஆங்கில வழிக்கல்வியில் படிப்பதால் அனைத்துப் பாடங்களையும் அவர்கள் எளிதில் புரிந்துகொண்டனர்.

உச்சரிப்பு முறை கற்பித்தல்

அரசு அளித்த ஆங்கில உச்சரிப்பு பயிற்சியை முறையாகப் பயன்படுத்திக் கொண்டேன். உச்சரிப்பு முறையிலேயே (Phonetics) அனைத்துப் பாடங்களையும் கற்பித்தேன். எங்கள் பள்ளி ஒன்றிய மேற்பார்வையாளர் உச்சரிப்பு முறைக் கற்பித்தலைத் தொகுத்து சிடியாக வெளியிடச் சொன்னார். அதில் சொல்லுக்கான ஒலிபெயர்ப்பு (Transcription), தமிழ் அர்த்தம், சொல்லின் வகை, உச்சரிப்பு ஆகியவை இருக்கும்.

8 ஆசிரியர்கள் இணைந்து முதல் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தின் அனைத்துச் சொற்களையும் எடுத்துக் கொண்டோம். அவற்றில் இருந்து தொகுப்பு ஒன்றைத் தயாரித்து முதல் பருவத்தை வெளியிட்டோம். இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவங்களுக்கான சொற்களை நானே தயாரித்தேன். சுமார் 10,000 சொற்கள் மற்றும் அதற்கான விளக்கங்கள் கொண்ட தொகுப்பை சிடியாக வெளியிட்டோம். ஆர்வம் கொண்ட பள்ளிகளுக்கு அதை இலவசமாக வழங்கிவருகிறேன்.


தொடுதிரையில் உச்சரிப்பு முறையில் கற்பிக்கும் அன்பாசிரியர் அன்னபூர்ணா என்னுடைய உதவி இல்லாமலே மாணவர்கள் படிக்கவேண்டும். அதனால் என்னுடைய மடிக்கணினியில் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளேன். அத்துடன் 4 டேப்லட்டுகளையும் சொந்த செலவில் மாணவர்களுக்காக வாங்கியுள்ளேன். அவற்றின் உதவியோடு புதிய வார்த்தைகளை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.



அசத்தும் அபாகஸ் கற்றல்

ஆர்வத்தின் காரணமாக ரூ.2.50 லட்சம் செலவில் அபாகஸ் படித்தேன். நானே அபாகஸ் உபகரணங்களை வாங்கி மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுத் தருகிறேன். இதன் மூலம் 100 கணக்குகளை என் மாணவர்கள் 5 நிமிடத்தில் போட்டுவிடுவார்கள். கணினி, டேப்லட்டுகள், அபாகஸ் உபகரணங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கப் பள்ளியில் இடம் இல்லை.

அதனால் தினமும் அவற்றை பள்ளிக்கு கொண்டுவந்து, வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன். பள்ளிக்கு தினமும் 4 பைகளைச் சுமந்துவரும் என்னைப் பலரும் விசித்திரமாகப் பார்த்திருக்கின்றனர்'' என்று சிரிக்கிறார் அன்னபூர்ணா.

அரசுப் பள்ளியொன்றின் 3-ம் வகுப்பு அறை அது. பன்னாட்டுப் பள்ளியொன்றின் வகுப்புக்குள் நுழைந்தது போல, அத்தனை வசதிகளோடு வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது. கொடையாளர்களின் உதவியோடு இவற்றைக் கட்டவில்லை. என்ன செய்தார் அன்னபூர்ணா? அவரே சொல்கிறார்.

ஆங்கிலப் பாடங்களைப் படிப்பதோடு நிறுத்தாமல், அவற்றைக் கருவாக வைத்து மாணவர்களைக் கொண்டு நாடகம் போட்டோம். அதையும், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்புகளையும் ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவாக இட்டேன். யாரென்றே தெரியாத நண்பர்கள், அதைக் கண்டு மாணவர்களுக்கு உதவினர். அப்போதுதான் அவர்களே நம் மாணவர்களுக்கு உதவும்போது, நாம் ஏன் உதவக்கூடாது என்று தோன்றியது.

முதலில் நம் வகுப்பறையை மாற்றத் திட்டமிட்டேன். யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என்பது என்னுடைய கொள்கை. அதனால் நானே அதைச் செய்ய முடிவுசெய்து, செயல்படுத்தினேன். கையில் அவ்வளவு பணம் இல்லாததால், நகையை அடகு வைத்துப் பணம் புரட்டினேன். கிடைத்த ரூ.1.75 லட்சத்தைக் கொண்டு வகுப்பறைக்குத் தரமான மேசை, நாற்காலிகள், ஸ்மார்ட் வகுப்பறை, தொடுதிரை, மின்விசிறி, தரை ஓவியங்கள் அமைத்தேன்.


தன் சொந்த செலவில் அன்னபூர்ணா அமைத்த வகுப்பறை

ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். மாணவர்களுக்காக நாம் எடுக்கும் முயற்சியை, அடையும் துன்பங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். அப்பாவின் 88-வது பிறந்தநாளுக்காக அம்மாவுக்கு ஒரு தோடு வாங்கினோம். அடகு வைக்கும்போது அதையும் சேர்த்தே வைத்தேன். மாணவர்களிடம் 'அப்பா இப்போது உயிருடன் இல்லை என்றாலும் உங்களுக்காக அதைச் செய்தேன்' என்று கூறினேன்.

பெரும்பாலான மாணவர்களின் கண்கள் கலங்கியிருந்தன. சில மாணவிகள் ஓடிவந்து அம்மா எனக் கட்டிக்கொண்டார்கள். எத்தனை நெகிழ்வான தருணம் அது? அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அதன்பின்னர் இன்னும் அதிகம் அவர்களுக்காகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

எதிர்காலத் திட்டங்கள்

எங்கள் வகுப்பறை போலவே பள்ளியின் மற்ற வகுப்பறைகளையும் மாற்றவேண்டும். நேற்று கூட பள்ளிக்குள் பெரிய பாம்பொன்று புகுந்துவிட்டது. மாணவர்களின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான சீருடைகளை வழங்கவேண்டும். நம்மையே நாம் ஒருமுறை நிரூபித்துவிட்டால், நிச்சயம் மக்கள் உதவுவார்கள் என்பது என் நம்பிக்கை.

சில ஆசைகளும் இருக்கின்றன. அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் என் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கவேண்டும். ஆங்கிலத்தின் முக்கியத்தையும், தேவையையும் உணர்ந்து தமிழக அரசு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உச்சரிப்பு முறைக் கற்றல், கற்பித்தலை அறிமுகப்படுத்த வேண்டும். ஆங்கிலம் என்ற மொழியின் மீதான பயம் முற்றிலுமாக ஒழிய வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். இவையனைத்தும் நிறைவேறும்பட்சத்தில் ஆசிரியப் பணிக்கான என் நோக்கம் நிறைவேறும்'' என்கிறார் அன்பாசிரியர் அன்னபூர்ணா.

முந்தைய அத்தியாயம்: அன்பாசிரியர் 35: ஆரோக்கிய ராஜ்- இசைத்து, பாடி, ஆடி பாடம் நடத்தும் ஆசிரியர்!

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு--> ramaniprabhadevi.s@thehindutamil.co.in


அன்பாசிரியர் அன்னபூர்ணாவின் தொடர்பு எண்: 9994219325

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement