Ad Code

Responsive Advertisement

பல்கலை ஆசிரியர் மாநில தகுதித் தேர்வு - வினாத்தாள் தமிழில் வழங்க வழக்கு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

பல்கலை, கல்லுாரி உதவி பேராசிரியர் மாநில தகுதித் தேர்வு வினாத்தாளை ஆங்கிலத்துடன், தமிழிலும் வழங்க நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில் 'டான்செட்'டிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


துாத்துக்குடி முடிவைத்தானேந்தல் சுடலைமுத்து தாக்கல் செய்த மனு: எம்.காம்.,-பி.எட்.,படித்துள்ளேன். துவக்கக் கல்வி முதல் பி.எட்.,வரை தமிழ் வழியில் படித்தேன். பல்கலை, கல்லுாரி உதவி பேராசிரியர் மாநில தகுதித் தேர்வை நடத்த, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையை, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) நியமித்துள்ளது. கடந்த ஆண்டு 16 மையங்களில், 26 பாடப் பிரிவுகளில் தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கில வழியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உதவியாக இருந்தது. 2017 ல் நடக்க உள்ள தேர்விற்கு ஆன்லைனில் பிப்.,12 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்தில் இருக்கும் என அறிவிப்பில் உள்ளது. இதனால் தமிழ் வழியில் படித்தவர்கள், வினாக்களை எளிதில் புரிந்து கொண்டு தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். அன்னை தெரசா மகளிர் பல்கலை பதிவாளர், டான்செட் உறுப்பினர் செயலரிடம் மனு அளித்தேன்.

தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். மாநில தகுதித் தேர்வு வினாத்தாளை 2016 போல் ஆங்கிலம், தமிழில் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுடலைமுத்து மனு செய்திருந்தார்.நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார்.பல்கலை பதிவாளர், டான்செட் உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, மார்ச் 14 க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement