Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.1ல் தொடங்க திட்டம் - 40 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்

சென்னை- பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியை ஏப்ரலில் தொடங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்த பணியில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கியது.

பத்தாம் வகுப்பு தேர்வு 8ம் தேதி தொடங்கியது. இரண்டு தேர்வுகளும் மார்ச் 31ம் தேதி முடிவுக்கு வருகின்றன.
கடந்த ஆண்டுகளில் மேற்கண்ட இரண்டு தேர்வுகளும் ஏப்ரல் மாதம் வரை நடக்கும். அதனால், பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் முடிந்த உடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கும்.

அதேபோல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் துவங்குவது வழக்கமாக இருந்தது. இதனால் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கும்.
அவர்கள் விடுப்பு எடுக்க முடியாத நிலை இருந்து வந்தது. அதை கருத்தில்கொண்டு, இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் இரண்டையும் மார்ச் மாதமே நடத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டது.

அதன்படி அட்டவணையும் தயார் செய்து தேர்வையும் நடத்தி வருகிறது. தேர்வு அட்டவணையில் பிளஸ் 2 தேர்வும் பத்தாம் வகுப்பு தேர்வும் அதிக இடைவெளிகளில் நடக்கும் படி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் பதற்றம் இல்லாமல் தேர்வை சந்திக்க முடிகிறது. மேலும், ஒரு தேர்வுக்கும் அடுத்த தேர்வுக்கும் இடையே விடுமுறைகள் வருவதால், உடனடியாக விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் மேற்கண்ட இரண்டு வகுப்பு தேர்வுகளின் விடைத்தாள்களும் தேர்வு முடிந்த பிறகே திருத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி அந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே மாதமே தேர்வு முடிவுகளை வெளியிட தேதியை அறிவித்துவிட்டதால் ஏப்ரலில் அனைத்து பணிகளையும் முடித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தேர்வுத்துறை வந்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 44 மையங்களில் நடக்க உள்ளது. இந்த பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் 6 மையங்களில் விடைத்தாள் திருத்த ஏற்பாடுகள் நடக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement