Ad Code

Responsive Advertisement

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தூய தமிழ் சொற்களை கற்பிக்க ’நற்றமிழ் அறிவோம்' அகராதி: வரும் கல்வியாண்டில் அறிமுகம்



tam
தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ’நற்றமிழ் அறிவோம்' தூய தமிழகராதி





தூய தமிழ் சொற்களை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க நற்றமிழ் அகராதி வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த அகராதியை தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகத முதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கோ.செழியன் புதன்கிழமை கூறியது: அகர முதலித் திட்டத்தின் தனித்திட்டப் பிரிவாகச் செயல்படுவது தமிழ்க் கலைக் கழகமாகும். தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு உரிய அரசாணை வழங்கப்பட்டது.

வல்லுநர் குழு: இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கென இயக்ககத்தின் இயக்குநர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர், பதிப்பாசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியல் தமிழறிஞர்கள், சொல்லாக்க வல்லுநர்கள், மொழிபெயர்ப்பு அறிஞர்கள், தமிழ் அகரமுதலி வல்லுநர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டதாகும்.

தாய்மொழிப் பற்றை வளர்க்க...: பிற மொழியை எழுதுவதும், பேசுவதும் பெருமை என்ற எண்ணம் அதிகரித்து வரும் சூழலில் மாணவர்களின் தாய்மொழிப் பற்றை வளர்ப்பதற்காக எங்களது இயக்ககம் சார்பில் புதிய நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிலையிலேயே மாணவர்களுக்கு பிறமொழிக் கலப்பில்லாத வகையில் நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு கற்பிக்க ’நற்றமிழ் அறிவோம்' என்ற தூய தமிழ் அகராதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வண்ணப் படங்களுடன் தமிழ்ச் சொற்கள்: இன்றைய தலைமுறையினர் ஆப்பிள், பலூன் உள்ளிட்ட வார்த்தைகளை தமிழ் என்று நினைத்து உச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்றைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தக்கூடிய சொற்களைக் கொண்டு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில் அரத்தி (’ஆப்பிள்'), ஊதாம்பி (’பலூன்'), ஒளிப்படம் (’போட்டோ'), கூராக்கி (’ஷார்ப்னர்'), கவ்வி (’கிளிப்'), சொடுக்கி (’பொத்தான்'), சேணியக்கி (’ரிமோட்'), சாளரம் (’ஜன்னல்') ஆகியவை உள்பட மொத்தம் 150 தூய தமிழ்ச் சொற்கள் அதற்குரிய வண்ணப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

இந்த நூல் வரும் 2017-2018-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதையடுத்து தலைமை ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் குறிப்பிட்ட பாட வேளைகளில் மாணவர்களுக்கு தூய தமிழ் சொற்கள் குறித்து ஆசிரியர்கள் கற்றுத்தருவர். இந்தத் திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்த கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நூலைத் தொகுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement