Ad Code

Responsive Advertisement

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்கள் இ-சேவை மையங்களில் இலவசமாக அடையாள அட்டை பெறலாம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 2017ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 92 லட்சத்து 71 ஆயிரத்து 593 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரத்து 264 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரத்து 289 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 5040 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

தமிழகத்தில் மட்டும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 66 ஆயிரத்து 25 பேர் கூடுதலாக உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்த 15 லட்சத்து 26 ஆயிரத்து 985 பேரின் பெயர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 15ம் தேதிக்கு மேல் வீடு வீடாக வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக விண்ணப்பித்தபோது, 2 லட்சத்து 32 ஆயிரத்து 974 பேர் தங்களது செல்போன் எண்களை தந்துள்ளனர். இப்படி செல்போன் எண் அளித்த 2.33 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் மூலம் நேற்று முதல் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த எஸ்எம்எஸ் தகவலில் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை, தமிழகத்தில் உள்ள எந்த இ-சேவை மையங்களில் காட்டினாலும், அவர்களுக்கு இன்று முதல் இலவசமாக புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும். 

புதிதாக விண்ணப்பம் செய்தவர்கள் செல்போன் எண்கள் இதுவரை வழங்கவில்லை என்றாலோ அல்லது எஸ்எம்எஸ் வரவில்லை என்றாலோ தலைமை தேர்தல் அலுவலகத்தில் உள்ள கால்சென்டருக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது செல்போன் எண்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பி வைத்து, அவர்களுக்கும் இலவசமாக வாக்காளர் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


ப்ளஸ்

செல்போன் எண்களை அளிக்காத வாக்காளர்கள் சுமார் 12.50 லட்சம் உடனடியாக அடையாள அட்டை வேண்டும் என்றால், இ-சேவை மையத்தில் பெயர், விலாசம் உள்ளிட்ட தகவலை கொடுத்து ரூ.25 கட்டணம் செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement