
பள்ளி மாணவர்கள் தங்களது புதிய ரோபோ கண்டுபிடிப்புகளை பார்வையாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி பரிசும் பாராட்டும் பெறும் களம் அது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகமும்,ரோபோட்டிக்ஸ் அண்ட ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் பவுன்டேஷன் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் மும்பை,கோல்கத்தா,புனே,பெங்களூரு,டில்லி உள்ளீட்ட பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பெரும்பாலான பள்ளிகள் பிரபலமான தனியார் பள்ளிகள் என்பதால் கலந்து கொண்ட மாணவர்களின் பேச்சிலும் உணவிலும் உடையிலும் செழுமை கொஞ்சம் துாக்கலாக இருந்தது.
வயருடன் அல்லது வயர் இல்லாமல் ரிமோட் வைத்து விற்கப்படும் கார் வாங்கி ஒட்டாத சிறுவர்கள் இருக்கமுடியாது,மாணவர்கள் அதை அடிப்படையாக வைத்து தாங்களே எலக்ட்ரிகல்ஸ் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் உதவியுடன் உருவாக்கியவைதான் இந்த ரோபோட்கள்.
இவர்கள் உருவாக்கிய ரோபோட்கள், சொல்லும் திசையில் செல்கின்றன, காபி டம்ளரை எடுத்துக்கொண்டு போய் கொடுக்கின்றன, குழுவாக இணைந்து கால் பந்து விளையாடுகின்றன, அவ்வளவு ஏன் ஜல்லிக்கட்டு கூட நடத்துகின்றன.ஒரு சந்தோஷம் என்ன வென்றால் ஜல்லிக்கட்டு விளையாடும் ரோபோக்களால் மாடாக வரும் ரோபோவும் சரி, அதை பிடிக்கும் வீரர்களான ரோபோக்களும் சரி காயம் அடைவதில்லை.
இவர்களுக்கு மத்தியில்தான் இந்த கட்டுரையின் கதாநாயகர்களை சந்தித்தேன்
சென்னை சின்னமலை அரசு உயர்நிலைபள்ளியின் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் லோகு,கார்த்திகேயன்,பிரேம்குமார்,கோகுல்,கௌதம்,ரவிகுமார் மற்றும் ரித்குமார் ஆகியோர்தான் அந்த கதாநாயகர்கள்.அரசு பள்ளி சார்பாக கலந்து கொண்டவர்கள் இவர்கள் மட்டுமே.
இவர்களது கண்டுபிடிப்பு ஆள் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனமாகும்.

மாணவன் பிரேம்குமாரின் அப்பா ஒரு ஆம்புலன்ஸ் வாகன ஒட்டுனர் அவர் தன் மகனிடம் பேசும்போது, முக்கியமான வேலை என்னுடையது ஆனால் நேரம் காலம் இல்லாமல் காத்துகிடப்பதாலும், அவசரமாக செயல்படுவதாலும் ரொம்பவே சோர்ந்து போய்விடுகிறோம். யார் கூப்பிட்டாலும் போக்குவரத்தில் தானாக போய்வரக்கூடிய ஆம்புலன்ஸ் வந்தால் தேவலை' என்று வேடிக்கையாக சொல்லியிருக்கிறார்.
இதை பிரேம்குமார் தன் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள அதையே ஐடியாவாக வைத்து ஆள் இல்லாமல் இயங்கும் ஆம்புலன்ஸ் ரோபோவை கண்டுபிடித்துவிட்டனர்.ஒரு போன் செய்தால் போதும் அருகில் இருக்கும் ஆம்புலன்ஸ் வீட்டில் வந்து நிற்கும்.

இந்த ஆம்புலன்சில் உதவியாளர்கள் இருப்பார்களா? சென்னை போக்குவரத்தில் இது சாத்தியமா? எந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்? இதெல்லாவற்றுக்கும் விடையுடன் வருங்காலத்தில் இது சாத்தியமாகலாம், எங்களைப் பொறுத்தவரை இது சமூகத்திற்கான ஒரு கண்டுபிடிப்பு அவ்வளவுதான் என்றனர் மாணவர்கள்.
அவ்வளவுதானா? இது பெரிய விஷயமப்பா! ஆமாம் இந்த ரோபோட்டை உருவாக்குவதற்கு நிறைய செலவாகியிருக்குமே என்ற போது, 'இல்லை சார் எங்களிடம் இருந்ததே இருநுாறு ரூபாய்தான் அதற்குள் செய்ததுதான் இந்த ரோபோ' என்றனர்.
இவ்வளவு மலிவானதா? என்று எங்கள் ரோபோவை குறைத்து மதிப்பிடாதீர்கள், இப்போது பாருங்கள் இதன் செயல்பாட்டை என்று இயக்கி காட்டினர். செயற்கையாக வைக்கப்பட்ட மேடுகளில் பள்ளங்களில் வளைவுகளில் அசாத்தியமாகவும் வேகமாகவும் இயங்கியது அரசு பள்ளி மாணவர்களின் அந்த அற்புத ஆம்புலன்ஸ் ரோபோ.
பார்த்தவர்கள் எல்லோரும் அந்த ஆம்புலன்ஸ் ரோபோவை கைதட்டி பாராட்டினர். நாமும் வாழ்த்துவோம்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை