Ad Code

Responsive Advertisement

TNPSC: அடுத்த வாரம் முதல் பல தேர்வுகளுக்கு தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர்,ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும் | இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர், உதவி ஜியாலஜிஸ்ட் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி விரைவில் தேர்வு நடத்தவுள்ளது. 

இதற்கான அறிவிப்புகள் அடுத்த வாரம் முதல் வெளியிடப்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். தேர்வுக்கு தயாராவோரின் வசதியைக் கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில், கடந்த 2016-17 தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள குரூப்-2, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில், கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அடுத்த வாரம் முதல் வெளியிட டிஎன்பிஎஸ்சி முடிவுசெய்துள்ளது. அவற்றின் மூலமாக உதவி ஜியாலஜிஸ்ட் பதவியில் 55 காலியிடங்களும், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர் பதவி யில் 25 காலியிடங்களும், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவியில் 3 இடங்களும் நிரப்பப்படும். முன்பு அறிவிக்கப்பட்டிருந்த காலியிடங்களைக் காட்டிலும் காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. 

உதவி ஜியாலஜிஸ்ட் தேர்வுக்கு எம்.எஸ்சி. (ஜியாலஜி) படித்தவர்களும், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர் பதவிக்கு உடற்கல்வியில் டிப்ளமோ முடித்தவர்களும், உதவி ஆணையர் பதவிக்கு பி.எல். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். முதலில் உடற்கல்வி பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பும் அதைத் தொடர்ந்து, எஞ்சிய 2 தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் தெரிவித்தார். 

இதற்கிடையே நடப்பு ஆண்டுக்கான (2017-18) தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு நிரப்பப்படாமல் இருக்கும் குரூப்-2, குரூப்-2-ஏ காலிப் பணியிடங்கள் புதிய தேர்வு கால அட்டவணையுடன் சேர்க்கப்பட இருப்பதால் அந்த பணிகளுக்கான காலியிடங்கள் மேலும் அதிகரிக்கும்.
  

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement