Ad Code

Responsive Advertisement

தலைவர் இல்லாத கல்வி கட்டண கமிட்டி மாணவர் சேர்க்கையில் பள்ளிகளுக்கு சிக்கல்

தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், கல்வி கட்டண கமிட்டிக்கு தலைவர் இல்லாததால், கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகள், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க, தமிழக அரசும், நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.எந்த பள்ளியும், கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என, நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், கல்வி கட்டணத்தில் பல அம்சங்களை சேர்த்து, பள்ளிகள் தரப்பில் மறைமுக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதை தடுக்க, நீதிமன்ற உத்தரவுப்படி, கல்வி கட்டண கமிட்டியை, அரசு அமைத்தது.

இந்த கமிட்டி, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் செயல்பட்டு வந்தது. இறுதியில், கமிட்டியின் தலைவராக இருந்த, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலுவின் பதவிக்காலம், 2015 டிச., 31ல் முடிந்தது. அதன்பின், புதிய தலைவரை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், 'கல்வி கட்டண கமிட்டிக்கு, ஆறு வாரங்களில், தலைவரை நியமிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. 
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நான்கு மாதங்களாகியும், இன்னும் தலைவர் நியமிக்கப்படவில்லை. இதற்கிடையில், புதிய கல்வி ஆண்டுக்காக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. ஆனால், கல்வி கட்டண கமிட்டி சார்பில், 2017 - 18ல், புதிய கல்வி ஆண்டுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படாததால், மாணவர்களிடம் பள்ளிகளால் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. எனவே, விரைவில் தலைவரை நியமித்து, குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகிகளும், பெற்றோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement