Ad Code

Responsive Advertisement

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை மாநகராட்சி நேரு விளையாட்டு அரங்கம் அருகே புதிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் இடத்தை பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்.

இதுகுறித்து மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
விளையாட்டுத் துறையை மேம்படுத்த தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் சர்வதேசத் தரத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் ரூ. 3.85 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக நகரின் மையப் பகுதியில் 5.63 ஏக்கர் பரப்பிலான மாநகராட்சி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், நீச்சல் குளம், கைப்பந்து, டென்னிஸ், தடகளத் தளங்களுடன் பல்வேறு உள்அரங்குகளும், விடுதி வசதியும் அமைக்கப்படவுள்ளன என்றார்.

பின்னர், தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை வெளியிடப்படும் என செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட மைய நூலகத்துக்குச் சென்று அரசு அருங்காட்சியகத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது: கொங்கு நாட்டு வரலாறு அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும் விதமாக ரூ. 2 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும். தவிர ஒரே இடத்தில் எல்லோரும் காணும் விதமாக அகழாய்வு அருங்காட்சியகமும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, அம்மன் அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, விளையாட்டுத் துறை மண்டல முதுநிலை மேலாளர் ராஜமகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி மேத்யூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement