Ad Code

Responsive Advertisement

பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ ஆய்வுத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருமா?

தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வந்த பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ ஆய்வுத் திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 1968 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாத்துரை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் மருத்துவ ஆய்வுத் திட்டத்தை செயல்படுத்தினார். திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் முதல் கட்டமாக தொடங்கப்பட்ட இத்திட்டம், படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தது.

2012 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்டு வந்த இத்திட்டத்தின் கீழ், அந்தந்த மாவட்டத்தின் சூழலுக்கு ஏற்ப அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள், அங்குள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை ஆய்வு செய்தனர். செவித் திறன், பார்வைத் திறன், பல் காரை, வளர்ச்சி குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதோடு, பூச்சி மாத்திரை, கண், காது சொட்டு மருந்து, வைட்டமின் மாத்திரைகள், களிம்பு, காய்ச்சல் மாத்திரை போன்றவற்றையும் மாணவர்களுக்கு வழங்கி வந்தனர்.

இதனிடையே கடந்த 2012-13 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நடமாடும் ஆலோசனை மைய திட்டத்தின் மூலம், சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த மருத்துவ ஆய்வுத் திட்டம் முடிவுக்கு வந்தது. அதற்கு மாற்றாக ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் மூலம், பள்ளி மாணவர்களுக்கு மருந்து மாத்திரை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களும், 10 மண்டலங்களின் கீழ் 3 முதல் 4 மாவட்டம் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டு நடமாடும் உளவியல் ஆலோசனைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் மன நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தில், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தலா ஒரு உளவியல் நிபுணர் மற்றும் வேன் ஓட்டுநர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

ஒரு மண்டலத்தில் 3 முதல் 4 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், ஒரு ஆலோசனை மையத்தின் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு, பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துதல், மன அழுத்தத்திற்கு தீர்வு போன்ற ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்படுவதால், மாணவர்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த பள்ளியில் உள்ள அறிவியல் ஆசிரியர்களே மேற்கொண்டு வருவதால், உளவியல் பயிற்சிக்காக நேரம் ஒதுக்கீடு செய்வதற்கு ஆசிரியர்களும் விரும்புவதில்லை. இதனால், அழையா விருந்தாளியாக சில பள்ளிகளுக்கு உளவியல் நிபுணர் குழு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், மாணவர்களின் சிறப்புக் கட்டணத்தை மட்டுமே நம்பி செயல்படுவதால், பெயரளவுக்கு மட்டுமே இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியது:

மருத்துவ ஆய்வுத் திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் பயனடைந்து வந்த நிலையில், நடமாடும் ஆலோசனை மையத் திட்டம் குறிப்பிட்ட சில பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. பழைய முறைப்படி கல்வித்துறைக்கு தனி மருத்துவர்களை நியமித்து, மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், அந்தந்த பகுதியில் உள்ள சுகாதாரத்துறை பணியாளர்களை இணைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த முடியாவிட்டாலும், அரசுப் பள்ளிகளில் மட்டுமாவது செயல்படுத்த முன்வர வேண்டும். அதன் மூலம் ஊர்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் அதிக அளவில் பயன்பெற முடியும் என்றார்.
- ஆ.நங்கையார் மணி

உளவியல் நிபுணர்கள் நீடிப்பதில்லை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடம் வசூலிக்கப்படும் சிறப்புக் கட்டணத்தில் ரூ.1 மருத்துவ ஆய்வுத் திட்டத்திற்காக வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புக் கட்டணத்தை அரசின் சார்பிலேயே செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழங்கப்படும் தொகையில் 10 சதவீதம் பள்ளியின் முதலுதவி சிகிச்சைக்கு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 90 சதவீதத் தொகை அந்தந்த மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த 90 சதவீதத் தொகையை பயன்படுத்தியே, 4 மாவட்டங்களுக்குச் செல்லும் உளவியல் நிபுணர்களுக்கு மாதம் ஒரு மாவட்டத்தின் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலான மையங்களை உருவாக்கினால், நிதி நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.

2 மாதங்கள் (ஏப்ரல், மே) பள்ளி விடுமுறை காலத்தில், ஊதியம் இல்லாமல் மாற்றுப் பணிக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால், உளவியல் நிபுணர்கள் பலர் இந்தப் பணியில் தொடர்ந்து நீடிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement