Ad Code

Responsive Advertisement

விரைவில் வரைவு கல்வி கொள்கை : ஆலோசனை குழு அமைக்க திட்டம்

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு, பல்வேறு தரப்பினர் அளித்துள்ள ஆலோசனைகள், யோசனைகளை ஆராய்வதற்கு, புதிய நிபுணர் குழு, விரைவில் நியமிக்கப்பட உள்ளது.மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தேசிய அளவிலான கல்விக் கொள்கையும் மாற்றப்படுகிறது. 

அதன்படி, நாட்டின் முதல் கல்விக் கொள்கையை, இந்திரா தலைமையிலான, காங்., அரசு, 1968ல் வெளியிட்டது. அதை தொடர்ந்து, 1986ல், ராஜிவ், 1992ல், பிரதமர் நரசிம்ம ராவ், 2005ல், மன்மோகன் சிங் தலைமையிலான, காங்., அரசுகள் வெளியிட்டன. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு மத்தியில் அமைந்ததும், புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சி துவங்கியது. இரு ஆண்டுகளாக, இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள், விவாதங்கள் நடந்து வந்தன.

இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து, நமது நாளிதழுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் அளித்துள்ள பேட்டி: புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள், விவாதம் நடத்தப்பட்டன. மக்கள் முதல், மக்கள் பிரதிநிதிகள் வரை, ஆசிரியர்கள் முதல், கல்வியாளர்கள் வரை என, பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் குழு அளித்துள்ள பரிந்துரைகளும், ஆலோசனைகளாக ஏற்கப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு தரப்பினர் அளித்துள்ள ஆலோசனைகள், பரிந்துரைகள், கருத்துக்கள் உள்ளிட்டவற்றை தொகுத்து, வரைவு கொள்கை உருவாக்க வேண்டும்; இதற்காக, புதிதாக ஒரு நிபுணர் குழுவை அமைக்க உள்ளோம். 

சிலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. அவர்களது ஒப்புதல் பெறப்பட்டு, இம்மாத இறுதிக்குள், இந்த ஆலோசனைக் குழு அமைக்கப்படும். நான்கு மாதங்களுக்குள் வரைவு கொள்கையை, இந்த குழு அளிக்கும். அதனடிப்படையில், புதிய தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்படும்.மத்திய அரசின், புதிய கல்விக் கொள்கையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறுவது, அரசியல் நோக்கத்துடனான விமர்சனமே. இந்த கல்விக் கொள்கை, மிகவும் ஜனநாயக ரீதியில், வெளிப்படையாக, அனைத்து தரப்பினரின் பங்களிப்புடனே நடத்தப்படுகிறது.

இந்த கல்விக் கொள்கை, குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கானது அல்ல; ஒரு தலைமுறைக்கு உகந்ததாக இருக்கும். அதனால் தான், சற்று கால தாமதம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய தேர்வு அமைப்பு : மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், மேலும் கூறியதாவது: கல்வி வியாபாரம் ஆவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 'நீட்' எனப்படும், மருத்துவக் கல்விக்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு மூலம், கல்வி நிறுவனங்கள், லட்சக் கணக்கில் பணம் வசூலிப்பது தடுக்கப்படுகிறது. 'நீட்' தேர்வை, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, குஜராத்தி மொழிகளிலும் எழுத முடியும். பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கென, நுழைவுத்தேர்வு நடத்துவதற்காக, தேசிய அளவில், தேர்வு அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement