Ad Code

Responsive Advertisement

பிறப்பு சான்றிதழ் கட்டாயமல்ல: பாஸ்போர்ட் விதிகள் தளர்வு

பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது, பிறப்பு சான்றிதழ் தாக்கல் செய்வது கட்டாயமில்லை என்பது உட்பட, பல்வேறு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இது குறித்து வெளியுறவு அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட்டை வேகமாகவும், சுலபமாகவும் பெறும் வகையில், பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.


பிறந்த தேதி அத்தாட்சி : பாஸ்போர்ட் சட்டத்தின்படி, 26.1.1989க்குப் பின் பிறந்தவர்கள், பிறந்த தேதிக்கான அத்தாட்சியாக, பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இனி, பிறந்த தேதிக்கான அத்தாட்சியாக பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை. அதற்கு பதிலாக, பிறந்த தேதி குறிப்பிட்டுள்ள பத்தாம் வகுப்பு சான்றிதழ் உள்ளிட்ட கல்வி சான்றிதழ்களையோ, பள்ளிகள் வழங்கும், டி.சி.,யையோ சமர்ப்பிக்கலாம்; பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள, பான் கார்டு, ஆதார் கார்டு, வாகனஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யலாம்.

இணைப்புகள் குறைப்பு : வெளியுறவுத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையைச் சேர்ந்த, மூன்று பேர் குழு பரிந்துரையின் அடிப்படையிலும், பாஸ்போர்ட் பெறும் நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

ஒற்றை பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு, ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, தாய் அல்லது தந்தை அல்லது காப்பாளர் என, யாராவது ஒருவர் பெயரை குறிப்பிட்டால் போதும்

விண்ணப்பத்துடன் நிரப்ப வேண்டிய பல்வேறு இணைப்புகளின் எண்ணிக்கை, 15ல் இருந்து, 9 ஆக குறைக்கப்பட்டுள்ளது

இந்த இணைப்புகளை, தனி தாளில், சுய சான்றொப்பத்துடன் அளித்தால் போதும்

திருமணமானவர்கள், திருமணப் பதிவு சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை

விவாகரத்து பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டியதில்லை. கணவன் அல்லது மனைவியின் பெயரையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை

ஆதரவில்லாத குழந்தைகள், பிறந்த தேதிக்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பிறந்த தேதியுடன் கூடிய அவர்கள் தங்கியிருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தின் கடிதத்தை தாக்கல் செய்யலாம்

தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தத்தெடுத்ததற்கான சான்று தேவையில்லை; சுயசான்றே போதும்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement