Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் அடித்ததில் மாணவரின் செவித்திறன் பாதிப்பு: ஆசிரியர் பணியிடைநீக்கம்

பள்ளி ஆசிரியர் அடித்ததில் மாணவரின் செவித்திறன் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் திங்கள்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
student
கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனாங்குப்பம் புதுசுனாமி நகரை சேர்ந்தவர் பொ.பிரவீணா. இவரது கணவர் பொற்செழியன் உயிரிழந்துவிட்டார். இதனால், பிரவீணா தையல் வேலை செய்து தனது 2 குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார். மூத்த மகன் பிரதாப் கடலூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


கடந்த 3ஆம் பிரதாப் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்குச் சென்றார். இதுதொடர்பாக பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கமால்பாட்ஷா மாணவரைக் கண்டித்தாராம். அப்போது, தனது பள்ளிச் சீருடை முந்தைய நாள் பெய்த மழையால் நனைந்திருப்பதால் சாதாரண ஆடையில் வந்ததாக மாணவர் தெரிவித்தார்.

இதை ஏற்காமல் ஆசிரியர் கமால்பாட்ஷா மாணவரை தேர்வு எழுதும் அட்டையால் அடித்ததாகத் தெரிகிறது. இதில் மாணவரின் காதுப் பகுதியிலும் அடி விழுந்ததாம். வீட்டுக்குச் சென்ற மாணவர் காது, தலைப் பகுதி வலிப்பதாக கூறினார். இதையடுத்து, கடலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வலி அதிகமாகவே கடந்த 4ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மாணவரின் செவித்திறன் குறைந்திருப்பதும், காதுக்குள் நரம்பு மண்டலத்தில் ரத்தம் உறைந்திருப்பதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக பள்ளிக்குச் சென்று பிரவீணா கேட்டபோது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டதாக கூறினராம். திங்கள்கிழமை மாணவரை மீண்டும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவப் பரிசோதனை செய்த போது, அவர் 80 சதவீதம் காது கேட்கும் திறனை இழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பிரவீணா புகார் அளித்தார். அதன்பேரில், ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.பாலமுரளி சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் ஆசிரியர் கமால்பாட்ஷாவை மறுஉத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மாணவரின் மருத்துவப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், மாணவர் தொடர்ந்து கல்வி கற்கத் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement