Ad Code

Responsive Advertisement

கருப்பு பணத்தை சட்டவிரோதமாக மாற்றுவோருக்கு 7 ஆண்டு சிறை: வருமான வரித்துறை எச்சரிக்கை.

கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக பிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தால் 7 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது.


கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான நவம்பர் மாதம் 8-ஆம் தேதிக்குப் பிறகு, அனைவரும் தங்களிடமுள்ள அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர்.


மோடியின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து மனை வணிக வியாபாரிகள், தங்க வர்த்தகர்கள், ஹவாலா மோசடியில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படுபவர்கள் போன்றோர் கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக மாற்றி வருவதாக வருமான வரித் துறையினருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

இதையடுத்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் வருமான வரித் துறையினர், மிக அதிகமான தொகையை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாகச் செலுத்துபவர்கள் குறித்த விவரங்களை வங்கிகளிடமிருந்து பெற்று வருகின்றன. குறிப்பாக ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் பணம் செலுத்துபவர்கள் குறித்த விவரங்களை வங்கிகள் அளித்து வருகின்றன.

அந்த விவரங்களை ஆய்வு செய்து வரும் துறை அதிகாரிகள், சந்தேகத்துக்குரிய வகையில் அதிக தொகையைச் செலுத்தியவர்களிடம் அந்த வருமானத்துக்கான ஆதாரத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

வருவாய் ஆதாரத்தைக் காட்டும் உரிய ஆவணங்களுடன் வருமான வரித் துறை அதிகாரிகளைச் சந்திக்க வேண்டியதற்கான தேதி மற்றும் நேரம் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணக்கில் வராத கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக பிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தால், புதிய பினாமி பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் 7 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், இதுவரை சுமார் ரூ.200 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணத்தை கண்டுபிடித்துள்ளோம். கடந்த நவம்பர் 8-ம் தேதிக்குப் பின்னர் 50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கணக்கில் வராத கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக பிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தால், நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள "பினாமி பணப் பரிவர்த்தனை திருத்தச் சட்டத்தின்" கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதாவது, தங்களது கணக்கில் வராத பணத்தை சட்டவிரோதமாக பிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தால் 7 வருட சிறைத் தண்டனையும் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

கருப்புப் பணம் முறைகேடாக வங்கிகளில் செலுத்தப்படுவதைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் "அனைவருக்கும் வீடு வழங்கும்" திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், கருப்புப் பண விவகாரத்தில் தொடர்ந்து அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement