Ad Code

Responsive Advertisement

20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் ஊதியத்தில் சிக்கல்!

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது  ஊதியத்தை பெறுவதில் டிசம்பர் மாத தொடக்கத்தில் கடும் சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் தமிழக அரசின் பதிலை எதிர்பார்த்து 20 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். 




பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரமதர் மோடி அறிவித்த நாளில் இருந்து மக்கள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த 9-ம் முதல் தேதி முதல் இதுவரை இன்னும் பணத்தேவைக்கான நிலைமை சரியாகவில்லை. ஏ.டி.எம்களில் தினமும் ஒருகார்டுக்கு 2000 ரூபாய் பெற முடிகிறது. வங்கிகளில் வாரத்துக்கு ஒருவர், 24,000 ரூபாய் வரை பெறலாம் போன்ற நிபந்தனைகளால் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.



அரசு ஊழியர்களுக்கு இசிஎஸ் மூலம் அவர்களது சம்பளம் வங்கி மூலம் பட்டுவாடா செய்யப்படும். அரசு ஊழியர்களின் வங்கி கணக்குகளுக்கு மாதத்தின் கடைசி நாளுக்குள் ஊதியம் வரவு வைக்கப்பட்டுவிடும். இன்றைய சூழ்நிலையில் இந்த மாதத்துக்குரிய ஊதியம் வரும் 30-ம் தேதிக்குள் ஒவ்வொரு அரசு ஊழியர்களின் வங்கி கணக்குக்கு வந்து சேர்ந்தாலும் அதை எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வியிடம் பேசினோம். "கறுப்புப் பணத்தையும், கள்ள ரூபாய் நோட்டுகளையும் ஒழிக்கவே மத்திய அரசு 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. புதிய வரவாக 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே மக்களிடையே அதிக பயன்பாட்டில் இருந்து வருகிறது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் பயன்பாட்டுக்கு அதிகளவில் வரவில்லை. இதனால் 2000 ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியவில்லை. இதன்காரணமாக அன்றாட தேவைகளை கூட மக்கள் சந்திக்க முடியவில்லை. இதனால் இந்த மாதம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தை ரொக்கமாக பணத்தை கையில் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்தி கோரிக்கை மனுவை கொடுத்தோம். ஆனால், அரசு ஊழியர்களுக்கு கையில் ரொக்கமாக பணம் வழங்கப்படாது என்று ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. இதனால் மாற்று ஏற்பாட்டை தமிழக அரசு செய்யும் என்று நாங்கள் எதிர்பார்த்து  காத்திருக்கிறோம். இன்று வரை எந்த அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை. எந்த ஏற்பாடும் அரசு செய்யவில்லை என்றால் இந்த மாத ஊதியத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறுவதில் கடும் சிக்கல் ஏற்படும். சம்பளம் பெற அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்க வேண்டிய நிலையும் உருவாகும். இதனால் ஓட்டுமொத்த அரசு இயந்திரமும் பாதிக்கப்படும்"என்றார். 



 இதுகுறித்து தமிழ்நாடு  தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன் கூறுகையில், "தமிழகத்தில் 13 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் 7 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடியிருப்பதற்கு போதிய வாடகை குடியிருப்புகள் இல்லாததால் பெரும்பாலோனார் வாடகை வீடுகளில் குடியிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களது ஊதியத்தில் சராசரி 25 சதவிகிதம் வாடகைக்கு கொடுக்கின்றனர். இதுதவிர கல்விக் கட்டணம், மருத்துவச்செலவு, மளிகை பொருட்களுக்கான செலவு உள்ளிட்ட பண தேவைகளை மாதத்தின் முதல் வார நாட்களில் சந்திக்க வேண்டியதுள்ளது. இதற்கு தேவையான பணம் கிடைக்கவில்லை என்றால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த மாதம் மட்டும் ஊதியத்தை ரொக்கமாக கையில் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார். 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார், "இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை அரசு கையில் கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆசிரியர்கள், தங்களது வேலை நேரத்தில் வங்கிக்கு செல்ல இயலாது. இந்த மாதம் ஊதியத்தைப் பெற விடுமுறை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். டெபிட் கார்டை கொண்டு எல்லா பணத்தேவைகளையும் சமாளிக்க முடியாது. எனவே அரசு மாற்று ஏற்பாடு செய்யும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்"என்றார்.



இதுகுறித்து ஆர்.பி.ஐ. வட்டாரங்கள் கூறுகையில், "அரசு ஊழியர்களின் சம்பளத்தை ரொக்கமாக கையில் வழங்க முடியாது. அதே நேரத்தில் வங்கிகளுக்கு தேவையான பணத்தை சப்ளை செய்துள்ளோம். அதன்மூலம் அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பெரும்பாலான ஏ.டி.எம்களை செயல்பட வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதோடு புதிய 500 ரூபாய் நோட்டுகளையும் அனைத்துப் பகுதிகளிலும் பயன்பாட்டில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய 2000 ரூபாய் நோட்டுக்கான சில்லறையை ஆர்.பி.ஐயில் பெற்றுக் கொள்ளலாம்" என்றனர். 

 தமிழக அரசின் நிதித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 3,500  கோடி ரூபாயை தமிழக அரசு கொடுக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையை காரணம்காட்டி அரசு ஊழியர்கள் சங்கங்கள் எங்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதுதொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. இதற்கிடையில் சம்பளம் வங்கிகள் மூலம் வழங்குவது தொடர்பான பணிகள் மட்டுமே தற்போது நடக்கிறது. ரொக்கமாக சம்பளம் வழங்குவது தொடர்பாக  ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டால் அதுதொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும்" என்றனர். 


 அரசு சங்கங்கள் அதிரடி 

 தமிழக அரசை எதிர்பார்த்து இதுவரை காத்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் தற்காலிக ஏற்பாடு ஒன்றை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தேசியமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் சங்கப் பிரதிநிதிகள் பேசி, முதற்கட்டமாக மாதத்தின் தொடக்கத்தில் 10,000 ரூபாயை கையில் பெற வழிவகை செய்துள்ளது. இருப்பினும் இந்த மாத தொடக்கம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement