Ad Code

Responsive Advertisement

தெலுங்கானா - 100 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக அரசு ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்க ஆலோசனை

500, 100 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு படையெடுக்கிறார்கள். இதனால் 100 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

இதையடுத்து வர்த்தகம், வரி செலுத்துதல் போன்றவற்றில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் இம்மாதம் நிதிநிலை தடைபட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி சந்திரசேகரராவ், தலைமை செயலாளர் ராஜீவ்சர்மா மற்றும் நிதிதுறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது அனைத்து வருவாய் துறைகளிலும் பாதிப்பு அடைந்து வருமானம் இல்லாமல் தடை ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அன்றாட தேவைகளுக்கே நிதி இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இதை சமாளிப்பது தொடர்பாக முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஆலோசனை நடத்தினார்.

தெலுங்கானாவில் மாதந்தோறும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பென்‌ஷன் வழங்க ரூ.2500 கோடி தேவை. மேலும் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன்களுக்கு ரு.1100 கோடி வட்டி கட்ட வேண்டும்.

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு மற்றும் வருவாய் குறைவு காரணமாக அடுத்த மாதம் தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்க ஆலோசிக்கப்பட்டது.

நிதிநிலை சரியானதும் மீதி சம்பளத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சூழ்நிலையை மற்ற மாநில அரசுகள் எவ்வாறு சமாளிக்கின்றன என்பதை ஆராய முதல்-மந்திரி சந்திர சேகரராவ் அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

அனைத்து நலத்திட்டங்களுக்கும் நிதியை நிறுத்திவிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்‌ஷன் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


மேலும் வங்கிகளிடம், இம்மாதம் கட்ட வேண்டிய வட்டி தொகையை சில நாட்கள் கழித்து செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திர சேகரராவ் கேட்க முடிவு செய்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement